பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


கொண்டிருக்கும்போதே மனம் நின்ைவுகளைத் தொடுக்க ஆரம்பித்தது. மனம் ஏதாவதொன்றில் ஒருமையாகக் குவியும் போது அந்த ஒன்றைத் தவிர இரண்டாவதாகச் செய்யப்படும் காரியம் சரியாக நடைபெறாது. பராக்குப் பார்த்துக்கொண்டே சிந்தனையில் மூழ்கியிருந்த மதிவதனி பூக்களை எடுத்து முடிவதை மறந்து வெறும் நாரையே மாற்றி மாற்றிச் சுருக்கிட்டு முடிந்துகொண்டிருந்தாள். தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த அவளுடைய அத்தை, அவள் பூத்தொடுத்துக் கொண்டிருந்த அழகைப் பார்த்ததும் பொறுக்க முடியாமல் சிரித்துவிட்டாள். “நீ பூத்தொடுக்கிற சீரைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏதோ நினைவில் எங்கேயோ கவனத்தை வைத்துக் கொண்டு வெறும் நாரை வளைத்து வளைத்து முடிந்து கொண்டிருக்கிறாயே அம்மா! நீ காளியம் செய்கிற அழகு மிகவும் நன்றாக இருக்கிறது; நானும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறேன். நாலைந்து நாட்களாக நீ பித்துப் பிடித்தவளைப் போல் இருக்கிறாய். வேளா வேளைக்கு உண்ண வருவதில்லை. இந்த வயதான காலத்தில் அண்ணனுக்கு உதவியாகக் கடைக்குப் போக மாட்டேனென்கிறாய். வேலையற்றுப் போய்க் கடற்கரை மணல் மேடுகளிலெல்லாம் கால் கடுக்கச் சுற்றிக் கொண்டிருக்கிறாய். நீ எப்போது வீட்டுக்குத் திரும்பி வருவாய் எப்போது வெளியே போவாய் என்பதே எனக்கும் அண்ணனுக்கும் தெரியாமற் போய் விட்டது. உன்னைப் போல் பருவம் வந்த பெண்ணுக்கு இந்தப் போக்கு நல்லதில்லை.” . . . .

அவளைப்பற்றித் தன் மனத்திலிருந்த குறைகளை அவள் முன்பே சொல்லித் தீர்த்துவிட்டாள் அத்தை. -

பூக்களையே தொடாமல் தான் வெறும் நாரை முடிந்து கொண்டிருப்பதை உணர்ந்தபோது மதிவதனிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. முதலில் ஐந்தாறு கண்ணிகள் பூ வைத்துத் தொடுத்திருந்தாள். அதன் பின்பு வெறும் நாரில்தான் வரிசையாக முடிச்சுக்கள் விழுந்திருந்தன. தப்பித்தவறி இது மாதிரி அத்தையின் வாயில் விழுந்துவிட்டால் நிறையப் பேச்சு வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் மீள முடியாதென்று அவளுக்குத் தெரியும்.