பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

45


மகாராணியை வணங்கி வீணையை ஏந்திப் பாடுவதற்குத் தயாராக முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“தேவி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு வந்ததிலிருந்து இந்த விநாடிவரை உங்கள் மனத்தில் ஏற்பட்ட பெரிய பெரிய கவலைகளால் நிம்மதியற்றுக் குழம்புகிறீர்கள் என்று தோன்றுகிறது. வல்லாளதேவனின் தங்கையும், அதங்கோட்டாசிரியரின் குமாரியுமாகச் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு உங்கள் கவலையைத் துரத்தப் போகிறார்கள்; பாருங்கள்!” என்றார் பவழக்கனிவாயர். மகாராணி அதைக் கேட்டு முகத்தில் மலர்ச்சியையும், உதடுகளில் சிரிப்பையும் வருவித்துக்கொள்ள முயன்றார். ஆனால் அந்தச் சிரிப்பில் இயற்கையான உயிர்ப்பு இல்லை.

அடுத்த கணம் நிலா முற்றத்தில் சிலம்பும் சலங்கையும் குலுங்கும் ஒலி எழுந்தது. நாட்டியத்துக்கு என்றே படைக்கப்பட்டதைப் போன்ற விலாசினியின் உடல் வளைந்து நெளிந்து அபிநயம் பிடித்த அழகை எப்படி வருணிப்பது? இது என்ன? குயிலின் இனிமை இந்த மானிட நங்கையின் தொண்டைக்கு எப்படிக் கிடைத்தது பாடுவது வல்லாளதேவனின் தங்கை பகவதிதானா? அல்லது தேவலோகத்துச் சங்கீத தேவதை ஒன்று வினையை ஏந்தி வந்து இந்த நிலா முற்றத்தில் உட்கார்ந்து பாடுகிறதா?

“சூடகந் தோள்வளை யார்ப்ப வார்ப்ப
தொண்டர் குழாம் எழுந்தார்ப்ப வார்ப்ப
நாடவர் நந்தம்மை யார்ப்ப வார்ப்ப
நாமும் அவர் தம்மை யார்ப்ப வார்ப்ப
பாடக மெல்லடி யார்க்கு மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்
காடக மாமலை யன்ன கோவுக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும்நாமே!”

திருவாசகத் திருப்பொற் சுண்ணப் பதிகத்திலிருந்து ஒரு பாடலை வரி வரியாக, நிறுத்தி, அபிநயத்துக்கு அவகாசம் கொடுத்து, நிதான கதியில் வீணையை மீட்டிப் பாடும் பகவதி அங்கிருந்த எல்லோரையும் முற்றிலும் புதிய உலகத்துக்கு