பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

498

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

இதைக் கேட்டதும் அமைதியான மகாராணியின் விழிகள் நீண்டு உயர்ந்து அகன்று விரிந்தன. தம் செவிகளையே அவரால் நம்ப முடியவில்லை. மறுபடியும் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார். “நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?”

“மகாமண்டலேசுவரர்மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுகிறேன்.”

“ 'எங்களுக்கு' என்றால்..? உங்களுக்கும், இன்னும் வேறு யாருக்கும்? நீங்கள் ஒருவராய்த்தானே இங்கு வந்திருக்கிறீர்கள்?”

"மகாராணியவர்கள் என்னுடைய துணிச்சலுக்காக என்னை மன்னிக்கவேண்டும். நான் ஒருவனாக இங்கு வந்திருந்தாலும் மற்றக் கூற்றத்தலைவர்களோடு கூடிக் கலந்து கொண்டு, பேசி அவர்கள் கையொப்பமிட்ட ஒப்புரவு மொழி மாறா ஒலையையும் கொண்டுதான் வந்திருக்கிறேன். இதோ எங்கள் ஒலை...”

அவர் தாம் கையோடு கொண்டு வந்திருந்த ஒப்புரவு மொழி மாறா ஒலையை மகாராணியிடம் நீட்டினார். அந்த விநாடி வரையில் சாந்தமும், அமைதியும், கருணையும் கலந்து ஒரு பெரு மலர்ச்சி நிலவிக்கொண்டிருந்த மகாராணியின் முகத்தில் மண்ணுலகத்து உணர்ச்சிகளின் சிறுமைகள் படிந்தன. பயமும் கலவரமும், பதற்றமும் நெற்றியில் சுருக்கங்கள் இட அந்த ஒலையை அவரிடமிருந்து வாங்கினார் மகாராணி. அப்படி வாங்கும்போது அவருடை கைகள் மெல்ல நடுங்கின. மேலே இட்டிருந்த இலச்சினைகளை நீக்கி அரக்கை உதிர்த்து, அதைப் பிரிக்கும்போது கைகள் இன்னும் அதிகமாக நடுங்கின. நீர்ப்பரப்பில் ஏதேனும் ஒரு பொருள் விழுந்தால் முதலில் சிறிதாக உண்டாகும் அலைவட்டம் வளர்ந்து விரிந்து, பெரிதாகிக் கரைவரையில் நீள்வதைப்போல் அந்தப் பயங்கர ஒலைச் சுருள் விரிய மகாராணியின் பயமும் அதற்கேற்ப விரிந்தது.

“ஐயோ! ஒரு மனிதர் மிக உயர்ந்த நிலையில் சாதாரண அறிவால் புரிந்துகொள்ள முடியாதவராக இருந்தால் அவருக்குத்தான் எத்தனை கெடுதல்கள்! எவ்வளவு பேருடைய