பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

499

பகை முதுகைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டிவிட்டுக் கால்களை வாரிவிடுகிற உலகமாகவல்லவா இருக்கிறது! மடையனைப் பார்த்து அறிவாளியாக வேண்டுமென்று உபதேசிக்கிறார்கள். அறிவாளியைப் பார்த்து அவன் ஏன் அவ்வளவு அறிவாளியாயிருக்கிறானென்று பொறாமைப் படுகிறார்கள். வளர்ச்சிக்குப் பாடுபட்டுக் கொண்டே தளர்ச்சி அடைகிறார்களே! பழங்காலப் புலவர் ஒருவர் திரி சொற்களால் பாடி வைத்த கடினமான அங்கதப் பாடல் பொருள் ஒளித்து வைக்கப்பட்ட பாடல் போல் சாமானியமானவர்களுக்கு விளங்கிக்கொள்ள முடியாதவராக இருக்கிறார். மகாமண்டலேசுவரர். அதனால்தான் இத்தனை குழப்பமும் ஏற்படுகிறது. இது என்ன கேவலமான உலகம்! எட்டாததாக, உயர்ந்ததாக, மேலே உள்ள பொருள்களை யெல்லாம் கீழே புழுதியிலும் அழுக்கிலும் புரளும்படி தரையில் இறக்கிப் பார்த்துவிட ஆசைப்படுகிறார்களே என்ன செய்வது? மனித இயல்பே அப்படி அமைந்துவிட்டது. உயரமான மரக்கிளைகளிலும், செடி, கொடிகளின் கொம்புகளிலும் இருக்கும் பழங்களையும் பூக்களையும், தரையில் உதிரச் செய்து பயன்படுத்துகிற வழக்கம் போலச் சில மேலான மனிதர்களையும் கீழே இறக்கித் தள்ளிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் போலும். பெருமையும் வளர்ச்சியும் அடைய வேண்டுமானால் கீழே இருப்பவர்களையும் மேலே போகச் செய்யவேண்டும். மேலே இருப்பவர்களையும் கீழே இழுத்துத் தள்ளி என்ன பயன்? ஒரு நொண்டி, 'ஊரிலுள்ள கால் பெற்ற மனிதரெல்லாம் நொண்டியாக மாறவேண்டும்’ என்று ஆசைப்படுவது போலன்றோ இருக்கிறது?

“தாம் சாவதற்குள் ஒரு நாளாவது, அல்லது ஒரு சில நாழிகைகளாவது 'தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரர்' என்ற பெயரோடு பதவி வகித்து விட்டுச் சாக வேண்டுமென்று இந்தக் கழற்கால் மாறனாருக்கு ஆசை. அந்த ஆசையின் விளைவுதான் வயது முதிர்ந்த காலத்தில் இப்படி மனம் முதிராத செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. பெரிய