பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்திரக் கூடத்துக் கொல்லையில் நின்று கொண்டு பார்த்த அவர்களுக்குத் தெரிந்தது. முகம் தெரியவில்லை. உட்பக்கத்திலும் மதில் சுவர் அருகே அதே மாதிரி மற்றொரு தென்னை மரம் இருந்ததனால், அந்த ஆள் அதன் வழியாகத்தான் மதில் மேல் ஏறியிருக்க வேண்டுமென்று அவர்கள் அநுமானித்துக் கொண்டார்கள். மிக வேகமாகத் தென்னை மரங்களில் ஏறிப் பழக்கப்பட்டவனாக இருந்தாலொழிய அவ்வளவு விரைவில் மேலே ஏறி மதில் சுவரை அடைந்திருப்பது சாத்தியமில்லை.

“திருட்டு நாய்! மதில்மேலிருந்தே செத்துக் கீழே விழட்டும்!” என்று கடுங்கோபத்தோடு இரைந்து கத்திக் கொண்டே பாம்பு படமெடுத்து நெளிவதுபோல் இருந்த ஒரு சிறு குத்துவாளை இடையிலிருந்து உருவிக் குறிவைத்து வீசுவதற்கு ஓங்கினான் கொடும்பாளுர் மன்னன். சோழன் அருகிற் பாய்ந்து வந்து வாளை வீசுவதற்கு ஓங்கிய அவனது கையைப் பிடித்துக்கொண்டான்.

“பொறுங்கள்! நீங்கள் விவரம் தெரிந்த மனிதராக இருந்தால் இப்படிச் செய்யமாட்டீர்கள். திருட்டுத்தனமாக இங்கே அவன் எப்படி நுழைந்தான் என்பதையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அவன் வந்த வழியே அவன் போக்கில் அவனை வெளியேறவிட்டுக் கடைசியில் பிடித்துக்கொண்டு உண்மை அறிய வேண்டும். கையில் அகப்பட்ட ஒரு காடையை (ஒரு வகைப் பறவை) வெளியே விட்டால் காட்டிலுள்ள காடைகளையெல்லாம் அதைக் கொண்டே பிடித்துவிடலாம். ஒசைப் படாமல் திரும்பி வாருங்கள். அவன் சுதந்திரமாகக் கவலையின்றித் தென்னைமரத்தின் வழியாக மறுபக்கம் அகழிக்கரையில் போய் இறங்கட்டும். நாம் அங்கே போய்க் காத்திருந்து அவனைப் பிடித்துக்கொள்ளலாம்” என்றான் சோழ மன்னன். எல்லோரும் உடனே அங்கிருந்து அகழிக்கரைக்கு விரைந்தனர்.

“கொடும்பாளூராரே! எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு வேகமாகத் தென்னை மரம் ஏறி இறங்கத் தெரிந்தவனாக இருந்தால் தென்னை மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும். ஒருவேளை தென்பாண்டி