பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

507


இருந்த அந்த ஒற்றனோ தன் கொள்கையில் தளராமல் திடமாக இருந்தான்.

கோட்டைக்குள் ஏறிக் குதிக்க வசதியாக உள்ளும் புறமும் வளர்ந்திருந்த அந்த இரண்டு தென்னை மரங்களையும் இரவோடிரவாக வெட்டிச் சாய்க்குமாறு தன் ஆட்களுக்கு உத்தரவு போட்டான் கொடும்பாளுர் மன்னன். மறுநாள் வைகறையில் கீழ்வானில் செம்மை படர்வதற்கு முன்னால் கொடும்பாளூர்க் கோட்டைக் கழுமரத்தில் செம்மை படர்ந்துவிட்டது. கோட்டாற்றுப் படைத்தளத்தில் வீரனாக உருவாகி அரண்மனையில் மெய்க் காவலனாகப் பணியாற்றிய தென்பாண்டி நாட்டு வீரன் ஒருவனின் குருதி அந்தக் கழுமரத்தை நனைத்துச் செந்நிறம் பூசிவிட்டது.


30. இடையாற்றுமங்கலத்தில் ஒர் இரவு

இடையாற்றுமங்கலத்துக்குப் போய் அங்கே நிலவறையில் மகாமண்டலேசுவரர் ஒளித்து வைத்திருக்கும் ஆயுதங்களைக் கோட்டாற்றுப் படைத்தளத்துக்குக் கிளப்பிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று தளபதி தனக்குக் கட்டளை இட்டபோது ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதன் அதற்கு உடனே ஒப்புக் கொள்ளவில்லை.

“மகா சேனாதிபதி அவர்கள் கூறுவதுபோல் இது அவ்வளவு இலேசான காரியமாகப் படவில்லையே எனக்கு? இடையாற்றுமங்கலத்துக்குப் போய் நிலவறைக்குள் புகுந்து ஆயுதங்களை வெளியேற்றிப் பறளியாற்றைக் கடந்து இங்கே கொண்டுவர விடுகிற அளவுக்குப் பாதுகாப்புக் குறைவாக மகாமண்டலேசுவரர் வைத்திருக்கமாட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது!” என்று தன் சந்தேகத்தைத் தெரிவித்தான் அவன்.

“குழைக்காதரே! நீங்கள் சொல்வது சரிதான். இது ஒன்று மட்டுமில்லை; மகாமண்டலேசுவரருக்கு எதிராக நாம் எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும், அது நமக்கு இலேசான