பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

49


வேளானும் பேசினான். குழல் மொழிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த வாலிபத் துறவிதான் பேசவேயில்லை. எப்படியாவது அந்தத் துறவியைப் பேச வைத்துவிட வேண்டுமென்று தளபதி ஆன மட்டிலும் முயன்றான். வேண்டுமென்றே பேச்சினிடையே துறவிகளைப் பற்றிப் பேசினான். அப்போதாவது அந்த இளம் துறவி வாய் திறந்து பேசுவாரென்று அவன் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தான். உதடுகளை நெகிழ்த்து மெளனமாக ஒரு புன்னகை செய்துவிட்டுப் பேசாமலிருந்தார் அவர். ‘மனிதர் வாய் பேச முடியாத ஊமையோ?’ என்று சந்தேகம் உண்டாகிவிட்டது அவனுக்கு.

மகாமண்டலேசுவரராவது அவருடைய புதல்வியாவது அந்தத் துறவியைத் தனக்கு அறிமுகம் செய்துவைப்பார்கள் என்று தளபதி எதிர்பார்த்தான். ஆனால் அவர்கள் அதைச் செய்யவே இல்லை. வேண்டுமென்றே அறிமுகம் செய்யாமலிருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. இந்தத் துறவி யார்? எங்கிருந்து வருகிறார்? ஏன் இப்படிப் பேசாமல் ஊமைபோல் மெளனமாக உட்கார்ந்து கொண்டு வருகிறார்? என்று வெளிப்படையாக இடையாற்று மங்கலம் நம்பியிடம் நேருக்கு நேர் கேட்டுவிடலாம். ஆனால் அந்தத் துறவியையும் அருகில் வைத்துக் கொண்டே அப்படிக் கேட்பது அவ்வளவு சிறந்த முறையாகாது. பண்பற்ற முரட்டு விசாரணையாக முடிந்துவிடும் அது!

அவர்கள் வேண்டுமென்றே பிடிவாதமாக அதைத் தன்னிடம் சொல்ல விரும்பாதது போல் மறைக்கும்போது கேட்பது நாகரிகமில்லை. ஆனால் ஒரு உண்மையைத் தளபதி வல்லாளதேவன் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. திருமணமாகாத தம் குமாரியை அந்த வாலிப வயதுத் துறவியோடு நெருங்கிப் பழகவிடுவதைக் கண்டபோது, துறவிக்கும் இடையாற்று மங்கலம் நம்பிக்கும் நெருங்கிய விதத்தில் உறவோ தொடர்போ இருக்க வேண்டுமென்று தெரிந்தது. குழல்மொழி அந்தத் துறவியிடம் நடந்து கொண்ட விதம் எவ்வளவோ நாள் தெரிந்து பழகிய மாதிரி கூச்சமோ,