பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

511


தாழை மரங்களின் மறைவில் நாணற் புதருக்குள் மறைக்கப்பட்டிருந்த படகை அதிகம் ஒலியுண்டாக்கிவிடாமல் மெல்ல வெளிக் கிளப்பிக்கொண்டு வந்தான் அதற்கு உரியவன். மகர நெடுங்குழைக்காதனும், அவனோடு இருந்தவர்களும் படகில் ஏறி அமர்ந்து கொண்டார்கள். படகு பறளியாற்றில் நகர்ந்து முன்னேறியது. பழக்கமில்லாத அந்தப் புதிய படகோட்டி படகை மெதுவாகச் செலுத்திக்கொண்டு போய் இடையாற்று மங்கலத்துக் கரையில் விருந்தினர் மாளிகைக்குப் பின்புறம் புதர் அடர்ந்த பகுதியில் நிறுத்தினான். படகு நின்ற இடத்துக்கு நேரே விருந்தினர் மாளிகையின் பின்புறத்து வாயில் கதவு அடைத்திருந்தது. கதவுக்குக் கீழே வரிசையாகப் படிகள். படிகளில் நாலைந்தை நீரில் முழுகச் செய்து பறளியாறு பாய்ந்து கொண்டிருந்தது.

“நீங்கள் எல்லோரும் இப்படியே இந்த இடத்தில் இருங்கள். நான் முன்பக்கமாக விருந்தினர் மாளிகைக்குள் புகுந்து வந்து இந்தப் பின்புறத்துக் கதவைத் திறந்து விடுகிறேன்” என்று மற்றவர்களை அங்கேயே நிறுத்தி விட்டு முன்புறம் சென்றான் மகர நெடுங்குழைக்காதன். மரங்களிலிருந்து உதிர்ந்திருந்த இலைச் சருகுகளில் கால் பதித்தால் எழுகிற சலசலப்பு ஒலி கூடக் கேட்கவிடாமல், பம்மிப் பம்மி நடந்துபோய் விருந்தினர் மாளிகையில் புகுந்து விட்டான் அவன். காவல் வீரர்களெல்லாம் அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவு தள்ளியிருந்த மகாமண்டலேசுவரர் மாளிகையைச் சுற்றியிருந்தார்கள். அரசுரிமைப் பொருள்கள் காணமல்போன சமயத்தில் மட்டும் தொடர்ந்து சில நாட்களுக்குத் தீவைச் சுற்றிலும் எல்லா இடங்களிலும் காவல் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. பின்பு நாளாக ஆக அந்தக் காவல் ஏற்பாடு சுருங்கித் தீவின் பிரதான மாளிகை அளவில் நின்று விட்டிருந்தது. அதனாலும் செறிந்து, கனத்த இருட்டும் மரங்களின் அடர்த்தியும் தனக்குச் சாதகமாக இருந்ததனாலும் ஆபத்துதவிகள் தலைவன் இடையாற்றுமங்கலத்தில் அந்த இரவில் அதிகம் துன்பப்படவில்லை. ஒருவன் வைத்து விட்டுப்போன பொருளை அவனே திரும்பி வந்து அடையாளமாக எடுத்துக் கொண்டு போகிற மாதிரிக் காரியம் சுலபமாக நடந்தது.