பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

516

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


தள்ளிவிட நினைத்திருந்தாரோ, அவரையே எதிரே பார்த்து விட்டதும் ஒன்றும் தோன்றாமல் அடங்கி நின்றார் அவர்.

எதிரே நிற்பவர்களை அப்படி ஆக்கிவிடுவதற்கு மகாமண்டலேசுவரர் என்ற மனிதரின் நெஞ்சிலும், நினைவு களிலும், கண்களிலும், பார்வையிலும், அவ்வளவேன்?-- ஒவ்வொரு அசைவிலும் தன்னைப் பிறர் அசைக்க முடியாததான பிறரை அசைக்க முடிந்த ஒரு வலிமை இருந்தது. பகைவர்களை அடக்கிவிடவும், நண்பர்களை ஆக்கிக் கொள்ளவும் முடிந்த இந்தப் பெரும் பேராற்றலைத் தவம் செய்து அடைந்த சித்தியைப் போல் வைத்திருந்தார் அவர்,

“ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தால் வரும்”

என்று துறவியின் ஆற்றலாகச் சொல்லப்பட்ட அதைத் துறவியாக வாழாமலே இடையாற்றுமங்கலம் நம்பி பெற்றிருந்தார்.

“பொன்மனைக் கூற்றத்துத் தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளாராகிய கழற்கால் மாறனார் அவர்கள் இன்று அரண்மனைக்கு வரப்போகிறாரென்று எனக்குத் தெரியவே தெரியாதே” என்று அவருடைய எல்லாப் பட்டப் பெயர்களையும் சேர்த்து நீட்டிச் சொல்லி அவரிடமே கேட்டார் மகாமண்டலேசுவரர். அந்தக் கேள்வியில் இயல்பான பேச்சின் தொனி கொஞ்சமாகவும், குத்தல் அதிகமாகவும் இருப்பதுபோல் பட்டது. கழற்கால்மாறனார் அதைக் கேட்டு மிரண்டு போய் நின்றார். அந்த மிரட்சி மகாராணியாருக்கு வேடிக்கையாக இருந்தது. எதிரே கம்பீரமாக நின்று சிரித்துக் கொண்டிருக்கும் மகாமண்டலேசுவரரிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் தவறான காரியத்தை மறைவாகச் செய்து கொண்டிருக்கும் போது வயதானவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிறு குழந்தை மருண்டு விழிப்பதைப்போல் விழித்துக் கொண்டு நின்றார் கழற்கால் மாறனார்.