பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

51


மரக்கலங்கள், கோட்டாற்றிலுள்ள தென் பாண்டிப் பெரும் படைகளின் நிலைமை என்று எத்தனையோ செய்திகளைப் பற்றி விரிவாக விவாதித்துப் பேசினார்கள். ஆனால் தப்பித் தவறிக் கூட அந்த வாலிபத் துறவியைப் பற்றிப் பேசவில்லை.

‘இந்த அகால வேளையில் இவர்களோடு எங்கே போய் விட்டு மாளிகைக்குத் திரும்புகிறார் இடையாற்று மங்கலம் நம்பி’ என்று இன்னொரு சந்தேகமும் தளபதிக்கு ஏற்பட்டது. கரையில் இறங்கியதும் மகாமண்டலேசுவரர் செய்த முதல் காரியம் வீரத்தளபதி வல்லாளதேவனுடைய சந்தேகத்தை மேலும் வளர்ப்பதாகவே இருந்தது.

“குழல்மொழி! தளபதி ஏதோ முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறார். அவரோடு நான் தனியாகப் பேச வேண்டும். நீ சுவாமிகளை அழைத்துக் கொண்டு போய் வசந்த மண்டபத்தில் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடு” என்று தீவின் மேற்குக் கோடியிலிருந்த வசந்த மண்டபக் கட்டிடத்தைச் சுட்டிக்காட்டினார் மகா மண்டலேசுவரர். “ஆகட்டும், அப்பா ! இவரை நான் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் தளபதியாரை அழைத்துக் கொண்டு போய் உங்கள் காரியத்தைக் கவனியுங்கள்” என்று சொல்லிவிட்டு, அவருடைய பெண் குழல்மொழி அந்த இளந் துறவியை அழைத்துக்கொண்டு அந்த நேரத்தில் தனியே வசந்த மண்டபத்தை நோக்கி நடந்ததைப் பார்த்தபோது தளபதி திகைத்துப்போய் நின்றுவிட்டான். அவன் மனத்துக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த மர்மக் குழப்பம் இன்னும் ஒரு படி அதிகமாகிவிட்டது.

“என்ன தளபதி? நாம் போகலாமா? அந்தரங்க மண்டபத்தில் போய் நாம் பேசவேண்டியதைப் பேசுவோம்” என்று கூறிக்கொண்டே முன்னால் நடந்தார் இடையாற்று மங்கலம் நம்பி, தளபதி வசந்த மண்டபத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் அந்தத் துறவியையும், பூங்கொடி அசைந்து துவள்வது போல் அவர் அருகே நடை பயிலும் குழல்மொழியையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே மகா மண்டலேசுவரரைப் பின்பற்றி நடந்தான்.