பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33. நினைப்பென்னும் நோன்பு

தன் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதா என்று அறிவதற்காகத் தான் கூடல் இழைத்ததை அத்தை பார்த்துவிட்டாளே என்ற வெட்கம் கூடல் கூடிய மகிழ்ச்சியில் சிறிது சிறிதாகப் புதைந்துவிட்டது மதிவதனிக்கு. தன் எண்ணங்களை நோன்புகளாக்கி வலிமையான அன்புத் தவத்தை உறுதியாக நோற்றுக்கொண்டிருந்தாள் அவள். செம்பவழத் தீவில் நாட்கள் வழக்கம்போலத்தான் கழிந்து கொண்டிருந்தன. மதிவதனி கவலையே இல்லாதவளைப் போல மகிழ்ச்சியோடு துள்ளித் திரிந்துகொண்டிருந்தாள். இடையில் சில நாட்களாக அவளுக்கு ஏற்பட்டிருந்த சோர்வு இப்போது இல்லை. தன் நினைவுக்குத் தன் உள்ளத்தை கேள்விக்களமாக்கி, இடைவிடாமல் தான் இயற்றிக் கொண்டிருக்கும் நினைவாகிய வேள்வி நோன்பிற்குப் பயன் உண்டு என்ற திடநம்பிக்கை அவளுக்குத்தான் அன்றே வந்துவிட்டதே.

உற்சாகமாகக் கடையில் போய் உட்கார்ந்து கொண்டு சங்குகளையும் பவழங்களையும் விற்றாள். தந்தை கடையைப் பார்த்துக்கொண்ட சமயங்களில் தனது சிறிய தோணியைச் செலுத்திக் கொண்டு தீவின் கரையோரமாகக் கடலைச் சுற்றி வந்தாள். இன்னும் சில சமயங்களில் ஏழு கன்னிமார் கோயில் புன்னை மரத்தடியில்போய்ப் பெரிய முனிவர்போல் கண்மூடி உட்கார்ந்து தியானம் செய்தாள். பைத்தியக்காரப் பெண்போல் தன் அருகில் யாருமில்லாத தனிமையான சமயங்களில் ‘நினைப்பதை அடைவது ஒரு தவம்’ என்று மெதுவாகத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

மதிவதனி அன்று மாலையில் ஒருவிதமான மகிழ்ச்சியோடு தோணியில் ஏறிக்கொண்டு கரையோரமாகவே அதைச் செலுத்திக்கொண்டிருந்தாள். அப்போது அலங்காரமான சிறிய கப்பல் ஒன்று தீவை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவள் கண்டாள். அதில் வருவது யாரென்று அறிந்து கொள்ள வேண்டும் என்று இயல்பாக அவள் மனத்தில் ஒர் ஆசை