பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


“வேளான்! பதற்றப்படாதே, நடந்ததையெல்லாம் ஆர அமரச் சிந்தித்து நிதானமாக எனக்குச் சொல்” என்று அவனைக் கேட்டார் அவர்.

“சுவாமி ஆயுதங்களைக் கடத்திக்கொண்டு போக வந்தவர்கள் யார், அவர்கள் எப்போது தீவின் எல்லைக்குள் பிரவேசித்தார்கள் என்ற விவரங்களெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆயுதங்களையெல்லாம் படகில் ஏற்றிப் பறளியாற்றைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது தற்செயலாகக் கரைப் பக்கம் வந்த யவனக் காவல் வீரர்கள் பார்த்துவிட்டனர். உடனே அவர்கள் ஓடிவந்து தோணித்துறைக்கு அருகில் குடிசையில் படுத்துக் கொண்டிருந்த என்னை எழுப்பி, ஆற்றில் போகும் படகு யாருடையதென்று விசாரித்தார்கள். நான் எனக்குத் தெரியாது என்றேன். உடனே எல்லோருமாக ஓடிப் போய்ப் பார்த்தோம். நிலவறை, விருந்து மாளிகை எல்லாம் திறந்து கிடந்தன. அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்து பார்த்தோம். என்ன நடந்திருக்க வேண்டுமென்று எங்களுக்குப் புரிந்துவிட்டது. விரைவாக இரண்டு படகுகளில் ஏறிக்கொண்டு சென்று, அந்தப் படகு நடு ஆற்றைக் கடப்பதற்குள் அதை வளைத்துக் கொண்டோம். படகில் ஆயுதங்களை ஏற்றிக் கனம் உண்டாக்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் வேகமாகச் செலுத்தித் தப்பிக்கொண்டு போகமுடியவில்லை. அந்தத் திருட்டுப் படகில் இரண்டே ஆட்கள் தான் இருப்பது போல் தெரிந்தது. நாங்கள் அருகில் நெருங்கிப் பிடிப்பதற்குள் ஆயுதங்களோடு படகை ஆற்றில் கவிழ்த்துவிட்டுத் தாங்களும் குதித்து நீந்தித் தப்பி விட்டார்கள் அந்த ஆட்கள்:

“வேளான் அவர்கள் யாராயிருக்க முடியுமென்று உனக்குத் தோன்றுகிறது? வந்து போனவர்களை இன்னா ரென்று கண்டு கொள்வதற்கு ஏற்ற அடையாளங்கள் எவற்றையாவது அவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்களா?” இப்படிக் கேட்டுக் கொண்டே வேளானுடைய முகத்தை உற்றுப் பார்த்தார் மகாமண்டலேசுவரர்.