பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


“இதோ பார்! நான் சொல்வதைத் தெளிவாகக் கேட்டுக்கொள். இன்னும் கால் நாழிகைக்குள் ஆபத்துதவிகள் தலைவன் இந்த அரண்மனையின் எந்த மூலையில் இருந்தாலும் தேடி அழைத்துக் கொண்டு வா, இதை உடனே செய்” என்றார்.

கருங்கல்லின் மேல் வரிசையாக நிறுத்தி நிறுத்தித் தாளகதி பிழையாமல் உளியை அடித்தாற்போல் ஒலித்த அந்த வார்த்தைகளின் கம்பீரத்துக்குத் தலைவணங்கி நடந்தான் அவன். மீண்டும் அளவாக அடியெடுத்து வைத்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் அவர் ஆபத்துதவிகள் தலைவனைக் கூட்டிக் கொண்டுவர எவ்வளவு நேரமாகு மென்று அவர் எதிர்பார்த்தாரோ அவ்வளவு நேரம் ஆகவில்லை. அவரால் அனுப்பப்பட்ட காவலன் மிகச் சில விநாடிகளுக்குள்ளேயே மகர நெடுங்குழைக்காதனை அழைத்துக் கொண்டுவந்து அவர் முன் நிறுத்திவிட்டான். வேங்கைப் புலி போல் வாட்ட சாட்டமான தோற்றத்தையுடைய அந்த மாவீரன் துணிவு ஒய்ந்து ஒடுங்கித் தலைதாழ்த்தி நாணத்தோடு அவர் முன் வந்து நின்றான். தம்முன் வருகிற பெண்களையெல்லாம் நாணப் புன்னகைப் பூக்கச் செய்யும் ஆற்றல், அழகும், வீரமும் உள்ள சில ஆண்களுக்கு உண்டு. அதைப் போலவே அறிவும் அறமும் ஒழுக்கமும் உள்ள சில பெரியவர்கள் தமக்கு முன் நிற்கும் ஆண்களைக்கூட ஒடுங்கிப் பெண் தன்மை எய்தச் செய்துவிடுவார்கள். கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டு இமையா விழிப்பாவையுடன் நிமிர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டு நிற்கும் அந்த மனிதருக்கு முன்னால் ஆபத்து உதவிகள் தலைவன் பெண் தன்மை எய்தினாற்போல்தான் நாணி நின்றான்.

காவலனை அங்கிருந்து வெளியேறுமாறு சைகை செய்தார் மகாமண்டலேசுவரர். அவன் வெளியேறினான்.

“குழைக்காதா! இதோ, என் கையிலிருக்கும் இந்தப் பொருளைக் கொஞ்சம் பார்” என்று சொல்லிக்கொண்டே பின்புறம் இருந்த கையை உயர்த்தி அவன் முகத்துக்கு நேர் எதிரே கொண்டு வந்து நீட்டினார் அவர். அவருடைய கையிலிருந்து விரிந்த வெண்பட்டுத் துணியைப் பார்த்தபோது