பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

546

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


செய்துவதுபோல் இப்படி ஒரு காரியத்தைத் தென்பாண்டி நாட்டுத் தளபதி செய்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து.”

திருமுகத்தைப் படித்தவுடன் தளபதி திடுக்கிட்டான். அதிலிருந்த வார்த்தைகளெல்லாம் தேள்களாக மாறி அவனை ஒரே சமயத்தில் கொட்டுவது போலிருந்தது.


35. போர் முரசு முழங்கியது

கொற்றகை, கரவந்தபுரம் பகுதிகளில் வடதிசை அரசர்களால் இரகசியமாக ஏவப்பட்ட ஆட்கள் என்னென்ன செயல்களைச் செய்தார்களோ, இதே வகையைச் சேர்ந்த செயல்களை மகாமண்டலேசுவரரால் தேர்ந்தெடுத்து அனுப்பப் பெற்ற ஆட்கள் வடக்கே செய்தனர். கோனாட்டு ஊர்ப்புறங்களிலும், கீழைப்பழுவூரைச் சேர்ந்த இடங்களிலும், சோழ மண்டலத்து எல்லைப் புறங்களிலும், பலப்பல மாறுவேடங்களில் சுற்றி வந்தனர் தென்பாண்டி நாட்டு ஆட்கள். தங்களைச் சேர்ந்த வீரன் ஒருவன் கொடும்பாளுர் அரண்மனையில் உளவறியும்போது பிடிபட்டு உயிர் இழக்க நேர்ந்த செய்தியைக் கேள்விப்பட்ட பின்பும் அவர்கள் தளர்ச்சியோ, பயமோ அடையவில்லை. அடிக்கடி மகாமண்டலேசுவரருக்குச் செய்தியனுப்பிக் கொண்டிருந்தனர் அவர்கள்.

இந்த நிலையில் கொடும்பாளுரில் ஒன்றுகூடித் தங்கியிருந்த வடதிசையரசர்கள் நன்றாக விழிப்படைந்து விட்டார்கள். தென்பாண்டி நாட்டின்மேற் படையெடுப்பது பற்றி உண்மையிலேயே அவர்களுக்கு இப்போது பயமும், மலைப்பும் ஏற்பட்டிருந்தன. இலங்கைப் படை உதவியும், சேரர் படை உதவியும் தென்பாண்டி நாட்டுக்குக் கிடைத்தால் தங்கள் படையின் கூட்டணி என்ன ஆவதென்ற அச்சம் அவர்களுக்கு மெல்ல மெல்ல உண்டாகியிருந்தது. தேவராட்டியின் கொற்றவைக் கூத்தைக் கண்டுகளித்த