பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

552

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


வரவழைத்துவிட வேண்டும்” என்று சொல்லிக் கூட்டத்தைக் கலைத்தான் சோழ மன்னன்.

அன்று மாலை கொடும்பாளுர்க் கோட்டையின் முன் புறத்து வாயிலுக்கு மேலே மதிலின் மாடத்தில் போருக்கு வீரர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அடையாளமான முரசம் இடிபோல் ஒலித்தது. சேரவாரும் போர்வீரர்களே! என்று அந்த முரசொலி அறைகூவியபோது கொடும்பாளுர் நகரை வியப்பில் ஆழ்த்தியது. மக்கள் கூட்டமாகக் கோட்டையைச் சுட்டிக்காட்டி நின்று அந்த முரசு ஒலிப்பதை வேடிக்கை பார்த்தனர்.


36. கூற்றத் தலைவர்கள் குறும்பு

மகாராணியாரிடமும், மகாமண்டலேசுவரரிடமும் அவமானப்பட்டு, ஒப்புரவு மொழி மாறா ஒலை ஏற்றுக் கொள்ளப்படாமல் ஊர் திரும்பிய பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் தம் குறும்புகளைத் தொடங்கினார்.

ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் பண்புகளையும், செல்வத்தையும் கெடுத்துக்கொண்டு, தன்னையும் தீயவழிகளில் ஈடுபடுத்திக்கொள்கிற அளவு பொறாமை அவனைக் கெடுத்துவிடும்.

“அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்”

என்று குறளாசிரியர் பாடியதற்கு இலக்கியமாக மாறியிருந்தார் கழற்கால் மாறனார். தம்முடைய சதிக்கு உடந்தையான கூற்றத் தலைவர்களை மறுபடியும் பொன்மனைக்கு வரவழைத்தார் அவர். அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார், பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலு வந்த பெருமாள், தோவாழைக் கூற்றத்து நன்கணிநாதர் ஆகிய மூவரும் இரண்டாம் முறையாகப் பொன்மனைக்கு வந்தார்கள்.