பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூன்றாம் பாகம்

1. நாளைக்கு நாண்மங்கலம்

கடலின் அடி மூலையும், தொடுவானமும் ஒன்றுபடுகிற இடத்தில் அளவும், பரப்புமற்ற பொன்னிறத்துப் பேரொளிப் பெருமலர் ஒன்று பல்லாயிரம் சோதிக் கதிர்களை நீட்டிக் கொண்டு மேலெழுந்தது! அந்த ஒளியின் எழுச்சியில் கடல் நீர் மாணிக்கக் குழம்பென மாறிச் செம்மை ஒளிர மின்னியது. அலைகள் கரையில் மோதும் ஒலியும், ஊழியர்கள் கப்பலை இழுத்து நங்கூரம் பாயச்சும்போது பாடும் ஒருவகைப் பாட்டின் கூட்டமான குரல்களும் கேட்டன. வைகறைக் காலத்தின் கீதமென்காற்று உடலைத் தழுவித் தண்மை பூசிச் சென்றது. கடற்பறவைகளின் குரல்களும் கேட்டன.

குமாரபாண்டியன் இராசசிம்மன் உறக்கம் கலைந்து புரண்டு படுத்தான். கண் இமைகள் கனத்துப்போய் விழிகளுக்குள் எரிச்சலாக இருந்தது அவனுக்கு.

“இளவரசே! எழுந்திருங்கள் கரை வந்துவிட்டது” என்று மெல்லத் தட்டி எழுப்பினார் சக்கசேனாபதி. குமார பாண்டியன் கண்களைத் திறந்தான்.

அடடா! என்ன அற்புதமான காட்சி அவன் கண்களுக்கு முன் விரிகிறது! நீலக்கடல் முடியுமிடத்தில் தரைமேல் ஒரு பசுமைக் கடல் தென்படுகிறதே! கரைக்குமேல் கண்பார்வை எட்டிப் பிடிக்கிற தொலைவுவரை அடர்த்தியான பசுமைக்காடு தெரிகிறது. கரைமேல் பிரயாணத்துக்கு ஏற்ற முறையில் அலங்கரிக்கப்பட்ட இரண்டு உயர்ந்த சாதிக் குதிரைகளோடு நாலைந்து வீரர்கள் நின்று கொண்டிருப்பதையும் இராசசிம்மன் பார்த்தான்.

“சக்கசேனாபதி ! காசிய மன்னர் வரவில்லை போலிருக்கிறது! யாரோ வீரர்கள்தான் குதிரையோடு வந்து காத்திருக்கிறார்கள். இவர்கள் எப்படி இவ்வளவு கணக்காக