பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. வெள்ளணி விழா

குமாரபாண்டியன் இராசசிம்மனும் சக்கசேனாபதியும் ஏறி உட்கார்ந்திருந்த மரக்கிளை பூகம்பம் ஏற்பட்டு ஆடுவதுபோல் ஆடியது! ஒரு யானைக் கூட்டமே சுற்றி மொய்த்துக் கொண்டு ஆட்டினால் மரம் பிழைக்குமா? அவர்கள் ஏறக்குறையத் தங்கள் உயிரின் மேல் வைத்திருந்த முழு நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கிய சமயத்தில்தான் விசிதபுரத்துச் சாலையில் அந்த ஒளி உதயமாயிற்று.

கையில் தீபங்களோடு ஒரே மாதிரி மஞ்சள் உடை அணிந்த பெளத்தமதத் துறவிகளின் பெருங்கூட்டமொன்று அந்தச் சாலையிலிருந்து வந்து கொண்டிருந்தது. ஒன்றுக் கொன்று உயர்வு தாழ்வு ஒலி வேறுபாடின்றி ஒரேவிதமான தொனியில் அந்தத் துறவிகள் சேர்ந்து பாடிக்கொண்டு வந்த பெளத்த சமய சுலோகங்கள் அந்தக் காடு முழுவதும் சாந்தி உணர்வை அள்ளிப் பரப்புவது போலிருந்தது. ‘அமைதி அமைதி என்று பெருங் குரலெடுத்து முழங்கிய அந்த இனிமை முழக்கம் கருணை மயமாக ஒலித்தது. உயிரினங்களின் வெறித்தனங்களையெல்லாம் அடக்கிக் கட்டுப்படுத்தித் தன் வசமிழக்கச் செய்து முடிவற்ற பேரமைதியில் ஆழ்த்தும் ஆற்றல் அந்த இன்னொலியில் இருந்தது போலும் “ஐயோ! பாவம் இத்தனை பிட்சுக்களும் வந்து இந்த யானைக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு திண்டாடப் போகிறார்களே’ என்று மெல்லிய குரலில் இராசசிம்மன் சக்கசேனாபதியின் காதருகில் சொன்னான். சக்கசேனாபதி அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?”

“பார்த்துக்கொண்டே இருங்கள்; என் சிரிப்பின் காரணம் உங்களுக்குப் புரியும்.”

விளக்கொளியும், கீத ஒலியும், பிட்சுகளின் கூட்டமும் அருகில் நெருங்க நெருங்க அங்கே ஓர் அற்புதமான மாறுதல்