பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. நந்தவனத்தில் நடந்த குழப்பம்

நிலா முற்றத்துப் படிகளில் வேகமாக இறங்கி எல்லோரும் கீழே சென்றனர். அத்தனை பேருடைய மனத்திலும் திகில் சூழ்ந்திருந்தது. வேற்றவர் நுழைய முடியாத புறத்தாய நாட்டுக் கோட்டைக்குள் அமைதியான நள்ளிரவில் நந்தவனத்தில் அப்படி ஒரு பயங்கரக் குழப்பம் ஏற்பட்டால் யாருக்குத்தான் திகில் உண்டாகாது?

மகாராணி வானவன்மாதேவியாரின் மனம் காரணமின்றி நடுங்கியது. ‘இன்று மாலை கன்னியாகுமரிக்குப் புறப்பட்டதிலிருந்து என்னுடைய போதாத காலமும் என்னோடு புறப்பட்டுவிட்டது போலிருக்கிறது. இன்றைக்குக் குறை இரவு கழிவதற்குள் இன்னும் என்னென்ன நடக்கப் போகின்றனவோ? ஐயோ! இடையாற்று மங்கலம் நம்பியின் வார்த்தைகளைக் கேட்டு இந்தப் புறத்தாய நாட்டுக் கோட்டைக்கு எதற்காக வந்து தங்கினேன் என்று எண்ணி அவர் மனம் வாடினார். பகவதியும், விலா சினியும் மிரண்டுபோய் உடன் நடந்தனர். ஆடவர்களாகிய பவழக்களிைவாயரும், அதங்கோட்டாசிரியரும் வேகமாக நந்தவனத்தை நோக்கி ஓடினர். நடக்கிற கலவரம் என்ன என்று நந்தவனத்துக்கு நேரில் போய் விசாரித்து அறியவேண்டும்’ என்ற ஆவல் மகாராணியின் உள்ளத்தில் அணுவளவும் இல்லை. ‘என்ன வேண்டுமானால் நடக்கட்டும்! எது நடந்தால் எனக்கென்ன? நாளைக்கு மகாசபைக் கூட்டம் நடந்து முடிகிறவரை பல்லைக் கடித்துக் கொண்டு முள்ளின் மேலிருப்பது போல் இந்த மாளிகையில் இருந்து தீர வேண்டியதுதான். அப்புறம் எந்தத் தவப் பள்ளியில் போய் எப்படி எப்படி வாழ்வின் எஞ்சியிருக்கும் பாவ நாட்கள் கழியப் போகின்றனவோ?’-என்று பழைய விரக்திதான் மகாராணியின் உள்ளத்தில் உறுதிபட்டது.

அந்த இரண்டு பெண்களையும் தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டு, தான் பெற்ற மக்களை அழைத்துச்