பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

592

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


ஏரிகளில் படகில் ஏறிக் கொண்டு மிதந்தான். சிம்மகிரிக்குகை ஒவியங்களைப் போய்ப் பார்த்தான்.

“நீங்கள் ஏன் எப்போதும் இந்தச் சங்கைக் கையில் வைத்துக் கொண்டே சுற்றுகிறீர்கள்!” என்று ஒரு நாள் கனகமாலையும் அவனைக் கேட்டு விட்டாள்.

“கனகமாலை! இந்தச் சங்கில் நான் என்றென்றும் மறக்க முடியாத ஒரு இனிய நினைவு மறைந்திருக்கிறது. இது என் கையில் இல்லாவிட்டால் மனம் ஏழையாகி, நினைவுகள் சூனியமாகி விட்டதுபோல் ஒரு பெருங் குறைபாட்டை உணர்கிறேன் நான்” என்றான் உருக்கமாக.

வெள்ளணி விழா முடிந்த சில நாட்களில் அவர்கள் எல்லோரும் பொலன்னறுவைக்குப் பயணமானார்கள். அங்கே குமாரபாண்டியனின் நாட்கள் கனகமாலைக்குத் தமிழ் கற்பிப்பதிலும், அவளுடைய அமுதத்தன்மை நிறைந்த காவியச் சிரிப்பில் தன் கவலைகளை மறந்து விடுவதிலும் கழிந்து கொண்டிருந்தன. வனங்களிலும், மலைகளிலும் அந்தக் கவிதைப் பெண்ணோடு சுற்றினான் அவன். அப்படிச் சுற்றுவது அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஒரு நாள் மாலை கனகமாலையும், அவனும் ஒரு பெளத்த விஹாரத்துக்குப் போய் வழிபாடு செய்துவிட்டு இருட்டுகிற நேரத்துக்கு அரண்மனைக்குத் திரும்பி வந்தார்கள். அப்படி வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் சக்கசேனாபதி அவசரமாக ஓடி வந்து “இளவரசே! நான் அன்று ‘தமனன் தோட்டத்துக் கப்பல் துறை ஊழியர்களிடம் எச்சரித்துவிட்டு வந்தது நல்லதாகப் போயிற்று. நேற்றுத் தமிழ் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றை அங்கே தடுத்து நிறுத்தியிருக்கிறார்களாம். அதில் சந்தேகப்படத்தக்க ஆட்களும் இருக்கிறார்களாம். தகவல் வந்திருக்கிறது” என்று இராசசிம்மனிடம் கூறினார்.


4. கப்பல் கைப்பற்றப்பட்டது

செம்பவழத் தீவில் மதிவதனி என்ற பெண்ணிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட பின்பு சேந்தனும், குழல்வாய்