பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பாண்டிமாதேவி / முதல் பாகம்


செல்வதைப்போல் பரிவோடும் பாசத்தோடும் அழைத்துக் கொண்டு அந்தப்புரத்துக்குள் சென்றார் மகாராணி.

இனி நிலாமுற்றத்தில் நடனமும், பாடலும் நிகழ்ந்து முடியும் தறுவாயில் ஏற்பட்ட அந்தக் குழப்பம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஏற்கெனவே நமக்குத் தெரியாமல் இந்தக் கதையில் நடந்து முடிந்துவிட்ட சில முன் நிகழ்ச்சிகளையும் இங்கே தெரிந்து கொண்டுதான் ஆகவேண்டி யிருக்கிறது. அவற்றைத் தெரிந்து கொண்டால் கதைத் தொடர்விட்டுப் போகாமல் விளக்கமாகப் புரிவதற்கு இயலும்.

‘மகாராணி வானவன் மாதேவி கன்னியாகுமரி ஆலயத்துக்கு வந்திருந்த அன்றைய தினம் மாலையில் நாஞ்சில் நாட்டின் தளபதி வல்லாளதேவன், பெரும் புலவராகிய அதங்கோட்டாசிரியர், காந்தளூர்ச் சாலை மணியம் பலங்காக்கும் பவழக்கனி வாயர் ஆகிய எல்லோரும் ஆலயத்துக்கு வந்திருந்தார்களே! மகாமண்டலேசுவரராகிய இடையாற்று மங்கலம் நம்பியும் அவருடைய புதல்வியும் மட்டும் ஏன் வரவில்லை? என்று சந்தேகம் நேயர்களுக்கு உண்டாகவில்லையா ? இந்தச் சந்தேகம் இதுவரை நேயர்களுக்கு ஏற்படவில்லையானால், உடனே ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்திவிட்டு மேலே தொடருகிறேன்.

அதே தினம் மாலையில் மகாமண்டலேசுவரரும் அவருடைய புதல்வி குழல்வாய் மொழியும், இன்னும் இந்தக் கதையில் இதுவரை நமக்கு அறிமுகமாகாத ஒரு புதிய பாத்திரமும் தென்பாண்டி நாட்டின் மேல்புறம் மேலை மண்டலக் கடற்கரையின் முக்கியத் துறைமுகப் பட்டினமாகிய விழிஞத்தில் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

சாரி சாரியாக ஏற்றுமதிக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மிளகுப் பொதிகள், கொற்கை முத்துச் சலாபத்திலிருந்து முத்திரையிட்டுக் கொண்டு வரப்பட்டிருந்த முத்து மூட்டைகள், ஏலக்காய், இலவங்கம், சாதிக்காய், கிராம்பு ஆகிய வாசனைத் திரவியங்கள் அடங்கிய பொதிகள் எல்லாம்