பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


படகுகளில் கட்டியிருந்த சிறுசிறு கொடிகளிலிருந்தும் அந்த வீரர்கள் ஈழநாட்டுக் கடற்படையைச் சேர்ந்தவர்களென்று நாராயணன் சேந்தன் நிதானித்துப் புரிந்து கொண்டான்.

“அம்மணி! ஏதோ சில காரணங்களுக்காகக் கப்பல்களைச் சோதனை செய்கிறார்கள் போலிருக்கிறது. இவர்களெல்லாம் ஈழநாட்டுக் கடற்படை வீரர்கள்” என்று பீதிகலந்த குரலில் குழல்வாய்மொழியிடம் சொன்னான் சேந்தன். குழல்வாய்மொழி கூத்தனை விசாரிக்கத் தொடங்கிவிட்டாள். “கூத்தா! ஈழ நாட்டு நடைமுறைகளும், கடற்பயணமும் எனக்கு நன்றாகத் தெரியுமென்று அப்போது பெருமையடித்துக் கொண்டாயே. இதெல்லாம் என்ன? நம்முடைய கப்பலை எதற்காக இந்த வீரர்கள் இப்படித் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்? ஏன் ஊமையாக நிற்கிறாய்? பதில் சொல்லேன்.”

கூத்தன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திரு திருவென்று விழித்தான். அவனுக்குத் தெரிந்தால்தானே சொல்வதற்கு! ஆரம்பத்தில் கப்பலில் இடம் பிடிப்பதற்காக அளந்த பொய் இவ்வளவு தூரத்துக்குத் தன்னைப் பாதிக்கு மென்று தெரிந்திருந்தால் அவன் அந்தப் பொய்யைச் சொல்லியிருக்கவே மாட்டான்.

“கப்பல் புறப்படும்போதே அபசகுணம் மாதிரி இந்தப் பயல் வந்து வம்பு பண்ணினான். அப்போதே இது மாதிரி ஏதாவது தொல்லை வருமென்று நான் நினைத்தேன்” என்று சேந்தன் படபடப்போடு கூத்தனை நோக்கிச் சீறினான். குழல் வாய்மொழி சினம் பொங்கப் பார்த்தாள். எல்லோருடைய கோபமும் கூத்தனின் மேல் திரும்பி அடிகள் உதைகளாக உருவெடுப்பதற்கு இருந்த சமயத்தில் அப்படி நடந்துவிடாமல் ஈழ நாட்டு வீரர்களெல்லாம் கப்பலுக்குள் ஏறி வந்து கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.

“இந்தக் கப்பல் எங்கே இருந்து வருகிறது?” சேந்தனைப் பார்த்து அதிகார மிடுக்குடன் இப்படிக் கேட்டார்கள், கப்பலுக்குள் ஏறிவந்த கடற்படை வீரர்கள்!

கேள்விக்குப் பதில் சொல்லலாமா, வேண்டாமா என்ற பாவனையில் சேந்தன் குழல்வாய்மொழியின் முகத்தைப்