பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

600

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


“கப்பலிலேயே சிறை வைத்துப் பார்ப்பதற்கு நாங்கள் கொள்ளையடித்துவிட்டோ, கொலைக் குற்றம் செய்துவிட்டோ இங்கு ஓடிவரவில்லையே?’ என்று அமைதியாக நின்று கொண்டிருந்த கூத்தனும் கொதிப்படைந்து கேட்டான். அவர்கள் அந்தக் கேள்வியைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. படகுகளையும் கப்பலையும் தங்கள் பொறுப்பில் செலுத்திக்கொண்டு போய்த் தமனன் தோட்டத்துத் துறையில் நிறுத்தினார்கள். கப்பலைச் சுற்றிலும் யாரும் வெளியேற முடியாமல் வீரர்கள் காவல் நின்று கொண்டனர். கப்பல் பிடித்துக்கொண்டு வரப்பட்ட செய்தி உடனே ஈழநாட்டுப் படைத்தலைவருக்கு அனுப்பப்பட்டது. குழல்வாய்மொழியும் சேந்தனும் மேல்தளத்தில் நின்று கூத்தனைத் திட்டிக்கொண்டிருந்தார்கள்.


5. கூத்தன் தப்பினான்

பITரிடமோ காண்பிக்க வேண்டிய கோபதாபங்களை யெல்லாம் தங்களுடன் அகப்பட்டுக் கொண்ட கூத்தனிடம் காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள் சேந்தனும் குழல்வாய் மொழியும். கூத்தன் இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவித்தான். இன்னும் சில நாழிகைகளில் அவர்கள் பேசிப் பேசித் தன்னை உயிரோடு சித்திரவதை செய்து விடுவார்களோ என்று நினைத்து அஞ்சுகிற அளவுக்கு அவனைப் பாடாய்ப் படுத்திவிட்டார்கள். தன் குட்டு வெளிப்பட்டு அவர்களிடம் அகப்பட்டுக்கொண்டால் என்ன ஆகுமோ என்ற பயமும் கூத்தனுக்கு ஏற்பட்டுவிட்டது. ஈழ மண்டலப் படைத் தலைவர் வந்து விசாரணை செய்யும் முன்பே குழல்வாய்மொழியும், சேந்தனும், தன்னை இன்னாரென்று புரிந்துகொள்ள நேர்ந்தால் தனக்கு அது பெருத்த அவமானமாகிவிடும் என்பதைக் கூத்தன் உணர்ந்துகொண்டான். அப்படியில்லாமல் படைத்தலைவர் வந்து விசாரணை செய்த பின் அகப்பட்டுக் கொண்டாலும் அவமானம்தான். மேலும், முன்கூட்டியே அந்தக் கப்பலிலிருந்து தப்பிக் கரையேறினால் அதனால் ‘கூத்தனுக்கு எவ்வளவோ நன்மை உண்டு.