பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

607

.

கவனத்தையும் கவரத்தக்க மிகப் பெரிய காரியமொன்றைத் திடீரென்று செய்வதற்கு இருக்கிற மனிதன் மாதிரி, இயற்கை அமைந்து அடங்கித் தன் ஆற்றலை ஒன்றுபடுத்திக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

“இன்றைக்கு மாலைக்குள் பெருமழை வரலாம் போலிருக்கிறது!” என்று குதிரையை வேகமாகச் செலுத்திக் கொண்டே சொன்னார் சக்கசேனாபதி. இராசசிம்மன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். ஒரே மேகக் குழப்பம். அத்தனையும் கனிந்த சூல் கொண்ட கருமேகங்கள்.

பொலன்னறுவையிலிருந்து நேர்மேற்கே சென்றால் தமனன் தோட்டம்தான். அனுராதபுரத்துக்குச் செல்லாமல் சிம்மகிரி, விசிதபுரம் ஆகிய ஊர்களைக் கடந்து நேர்வழியாகவே பயணம் செய்வதென்று முடிவு செய்து கொண்டார்கள் அவர்கள். எவ்வளவு வேகமாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு வேக மிகுதி அவர்களுடைய குதிரைப் பயணத்தில் இருந்தது. இருவரும் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு செலுத்துவதுபோல் குதிரைகளைச் செலுத்தினர்.

“சக்கசேனாபதி ! எனக்கென்னவோ நான் இங்கே அதிக நாட்கள் தங்கியிருக்க முடியுமென்று நம்பிக்கை ஏற்படவில்லை. எந்த விநாடியிலும் என்னைத் தேடிக் கொண்டு தென்பாண்டி நாட்டிலிருந்து ஆட்கள் வரலாம். விரைவாக நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்குமென்று என் மனத்தில் ஒரு தோற்றம் ஏற்படுகிறது” என்று போகும்போது இருந்தாற்போலிருந்து அவரிடம் கூறினான் இராசசிம்மன்.

“போர் ஏற்பட்டாலொழிய அவ்வளவு அவசரமாக உங்களைத் தேடிக்கொண்டு யாரும் வரப்போவதில்லை. தவிர, உங்களைத் தேடி வருவதற்கு நீங்கள் இங்கே தான் வந்திருக்கிறீர்கள் என்று யாருக்குத் தெரியும்? நீங்களாக எதையாவது மனத்தில் நினைத்துப் பதற்றமடையாதீர்கள், இளவரசே!” என்று அவர் அவனுக்குப் பதில் சொன்னார்.

அதைக் கேட்டு இராசசிம்மன் சிரித்தான். “காணாமல் போன நான் எங்கே சென்றிருப்பேன் என்று அனுமானிக்க முடியாத அளவுக்குத் தென்பாண்டி நாட்டு