பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. ஒரு துயர நிகழ்ச்சி

வெள்ளத்திலும், புயலிலும் சிக்கிக்கொண்டு மீளும்வழி தெரியாமல் இறந்துபோன அந்தப் பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்துக் குமாரபாண்டியன் பெயர் சொல்லி அலறியதைக் கண்டதும் சக்கசேனாபதிக்கும் புத்த பிட் சுவுக்கும் அடக்கமுடியாத வியப்பு ஏற்பட்டது.

முகத்தைப் பார்த்து இனங்கண்டு கொண்டதும் அவன் வாயிலிருந்து அல்றலாக ஒலித்தது அந்த ஒரே ஒரு வார்த்தை தான். அதன்பின் அவன் வாயிலிருந்து வார்த்தையே பிறக்க வில்லை. விழிகள் விரிய முகத்தில் மலைப்பும், பீதியும் தெரிய, வாய்பேசும் ஆற்றல் இழந்துவிட்டதுபோல் அப்படியே அசையாமல் நின்றான் அவன்.

“இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா? இவள் யார்?” என்று ஒரே சமயத்தில் சக்கசேனாபதியும் பிட்சுவும் அவனை நோக்கிக் கேட்டார்கள். சிறிது நேரம் அவர்கள் கேள்வியையே காதில் போட்டுக் கொள்ளாதவன்போல் மலைத்தது மலைத்தபடியே நின்ற இராசசிம்மன் பின்பு மெல்ல தலை நிமிர்ந்தான்.

“சக்கசேனாபதி ! இது என்ன பரிதாபம்! தென்பாண்டி நாட்டிலிருந்து கடல் கடந்துவந்து இறங்கி இந்தப் பெண் தனியாக எப்படி இங்கே வந்தாள்? இவளுடைய விதி இங்கே வந்து முடிய வேண்டுமென்றுதான் இருந்ததா?” என்று பரிதாபம் மிக்க குரலில் அவரை நோக்கிக் கூறினான்.

“இந்தப் பெண் யாரென்றே நீங்கள் இன்னும் எனக்குச் சொல்லவில்லையே?” என்று கேட்டார் அவர்.

“சந்தேகமேயில்லை! இவள் தென்பரண்டி நாட்டுத் தளபதி வல்லாளதேவனின் தங்கை பகவதி என்று பெயர்! இவள் எப்படி, எதற்காக யாருடைய உதவியால் இங்கே வந்தாள் என்பதல்லவா எனக்குப் புதிராக இருக்கிறது. எப்படியானாலும் இந்த அவலக் காட்சி என் நெஞ்சை உருக்குகிறது. இந்த வயதில் இந்தப் பெண்ணுக்கு இப்படி ஏற்பட்டிருக்க வேண்டாம்” என்று நாத் தழுதழுக்கக் கூறிவிட்டுக் கண்களில் திரண்ட நீரைத் துடைத்துக் கொண்டான் குமாரபாண்டியன்.