பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

619


“இளவரசே! நீங்கள் பிழையாக அனுமானம் செய்கிறீர்கள். இவள் அந்தப் பெண்ணாக இருப்பாளென்று என்னால் நம்பமுடியவில்லை. அவளாவது, தென்பாண்டி நாட்டிலிருந்து இங்கே ஓடிவருகிறதாவது! தளபதியின் தங்கை மாதிரியே முக அமைப்பும், தோற்றமுமுள்ள யாரோ ஒரு பெண்ணாக இருப்பாள் இவள்” என்றார் சக்கசேனாபதி.

“எனக்கும் அப்படிச் சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்த ஆண்மை மதர்ப்பும் பெண்மை நளினமும் கலந்த அழகு முகம் அந்தப் பெண்ணுடையது போலவே இருக்கிறதே!” என்று இராசசிம்மன் கூறியபோது, “சாவும், நோவும்கூடத் தனக்கு வேண்டியவர்களுக்கு வந்தால்தான் மனிதனுக்கு அனுதாபப்பட முடிகிறது. வேண்டாத முன் பின் தெரியாதவருக்காக அனுதாபத்தைக்கூட அநாவசிய செலவு செய்ய மனிதன் தயாராயில்லை”.-என்று மனதுக்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டார் பிட்சு.

“நான் சொல்வதை நம்புங்கள். இது நிச்சயமாகத் தளபதியின் தங்கையாக இருக்கமுடியாது. தோற்றத்திலுள்ள ஒற்றுமையே உங்கள் கண்களை ஏமாற்றுகிறது. கவலையை விடுங்கள்” என்று சக்கசேனாபதி உறுதியாகக் கூறினார்.

“நீங்கள் சொல்கிற மாதிரி இருந்தால் நல்லதுதான். ஆனால் நமக்காக அப்படி இருக்குமா? இந்தப் பாவிப் பெண் நேற்றிரவு அடிகள் சொன்னதைக் கேட்டு அவரோடு வந்திருக்கக் கூடாதோ? இப்படி உயிர்விடவா அடிகள்மேல் சந்தேகப்பட்டு மழையிலும் புயலிலும் திண்டாடினாள்? ஐயோ! விதியின் கொடுமையே!” என்று புத்தபிட்சுவிடம் பிரலாபித்தான் இராசசிம்மன். துயரம் பொதுவானது, யாராயிருந்தாலும் மனம் வருந்திக் கலங்கவேண்டிய இளமைச் சாவு இது. ஆனாலும் நம் கையில் என்ன இருக்கிறது? நாம் துன்பங்களைக் காணவும், நுகரவும், உண்டாக்கவுமே பிறந்தவர்கள். வெறும் மனிதர்கள்” என்று உணர்ச்சி கொந்தளிக்கும் சொற்களால் இராசசிம்மனுக்கு ஆறுதல் கூறினார் பிட்சு.

“நாம் என்ன செய்யலாம்? நேற்றிரவு அவ்வளவு மழையிலும் காற்றிலும் இந்தப் பெண்ணின் ஒலம் கேட்டதும்