பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

625


“இந்தச் சில நாட்களுக்குள் இங்கு வந்ததே இப்போது பிடிபட்டுள்ள ஒரே கப்பல்தான். கப்பல் விழிஞத்திலிருந்து வருகிறதென்று அறிந்தோம். அதில் ஒரு முன்குடுமிக்கார மனிதரும், ஓர் இளம் பெண்ணும், இன்னொரு இளைஞனும் ஆக மூன்று பேர்கள் வந்தார்கள். ஆனால் கப்பலில் பிடிபட்ட தினத்தன்று மாலை அந்த இளைஞன் மட்டும் காணாமல் போய் விட்டான்” என்று கடற்படை வீரர்கள் பிடிபட்ட கப்பலின் நிலைமையை விவரித்து மறுமொழி கூறினர்.


9. அவசரப் பயணம்

பாதி வழியில் எதிர்கொண்டு சந்தித்த தமனன் தோட்டத்துக் கடற்படை வீரர்கள் கூறிய செய்தியிலிருந்து இறந்த பெண் கப்பலில் வந்து இறங்கியவளாக இருக்க முடியாதென்று தெரிந்தது. அவ்வளவில் தற்காலிமான திருப்தி ஒன்று ஏற்பட்டது இராசசிம்மனுக்கு. ‘கப்பலில் வந்த மூன்று பேர்களில் ஒரே ஒர் இளைஞன்தான் காணாமற் போய்விட்டானென்று, இவர்கள் கூறுகிறார்கள். எனவே பகவதி இந்த கப்பலில் வந்து இறங்கியிருக்க முடியாது என்று தன் மனத்தை ஆற்றிக்கொண்டு, “சக்கசேனாபதி! என்னைத் துன்புறுத்துவதையே நோக்கமாகக் கொண்டு, என் பகைவர்கள் அனுப்பிய முரட்டு ஒற்றர்கள் சிலர் பிடிபட்டிருக்கும் இந்தக் கப்பலில் வந்திருக்கலாம் என்று நீங்களும் நானும் வந்து பார்த்தோம். ஆனால் கப்பலில் விழிஞ்த்திலிருந்து வந்தது என்றும் அதில் ஏற்கெனவே தப்பிச் சென்ற இளைஞனைத் தவிர ஒரு முன்குடுமிக்காரரும், இளம் பெண்ணொருத்தியும் இருக்கிறார்களென்றும் இவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் யாராயிருக்கலாம் என்பதை இப்போதே நான் கூறிவிட முடியும்” என்று அவரிடம் சொன்னான் இராசசிம்மன்.

“முடியுமானால் சொல்லுங்கள், பார்க்கலாம். யார் அவர்கள்?” என்று அவர் அவனைக் கேட்டார்.