பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


“வேறு யாராயிருக்க முடியும்? மகாமண்டலேசுவரர்தான் தம் பெண்ணையும் நாராயணன் சேந்தனையும் அனுப்பி யிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.”

“அவர் அவ்வாறு அனுப்புவதற்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது:”

“எனக்கு ஏதாவது அந்தரங்கமான செய்தியை அவர் சொல்லி அனுப்பியிருக்கலாம் அல்லவா?”

“அவரிடம் தங்கியிருப்பதுபோல் இருந்து அவரையும் ஏமாற்றிவிட்டு அரசுரிமைப் பொருள்களையும் சொல்லாமல் கடத்திக்கொண்டு என்னோடு இங்கு ஓடி வந்திருக்கிறீர்கள் நீங்கள். இவ்வளவு அவமதிப்பாக நடந்துகொண்ட பின்பும் உங்களைத் தேடிக் கடல் கடந்து தம் பெண்ணையும், அந்தரங்க ஒற்றனையும் அவர் எப்படி அனுப்புவார்?”

“எல்லா மனித உணர்ச்சிகளையும் அளவிடுவதுபோல் மகாமண்டலேசுவரருடைய உணர்ச்சிகளையும் சாதாரணமாக அளவிட முயல்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு இப்படித் தோன்றுகிறது, சக்கசேனாபதி!” .

“அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இளவரசே! முதலில் உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏறக்குறைய தீர்ந்துவிட்டது. இந்தத் துறையில் நாம் வந்து இறங்கிச் சென்ற நாளுக்குப் பின் எந்தக் கப்பலிலும் வல்லாளதேவனின் தங்கை பகவதி வந்து இறங்கிச் சென்றதாக யாரும் அடையாளம் கூறவில்லை. அதனால் நேற்றிரவு காட்டில் இறந்த பெண்ணைப் பற்றி நீங்கள் சந்தேகப்பட்டு அழுதது வீண் மனப்பிரமைதான். உருவ ஒற்றுமை உங்கள் கண்களை ஏமாற்றிவிட்டது.”

“இல்லை, சக்கசேனாபதி! நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் இப்போதைக்கு அதை நான் தீர்மானிப்பதற்கு இயலாது. இறந்தது அந்தப் பெண்ணில்லை என்பதை அங்கே சென்று அவளை உயிருடன் பார்த்தாலொழிய நான் நம்பமாட்டேன்” என்ற இராசசிம்மன் அப்போதும் பிடிவாத மாகத்தான் அவருக்குப் பதில் கூறினான்.

தமனன்தோட்டத்துக் கப்பல் துறை நெருங்க, நெருங்க அவர்கள் இருவருடைய மனத்திலும் ஆவல் அடித்துக் கொண்டது.