பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

61


“அப்படியே செய்கிறேன், பிரபு!” என்று சொல்லிக் கைகூப்பி வணங்கி விட்டுக் கிளம்பினான் அவன்.

“சேந்தா! கொஞ்சம் இப்படி அருகே வா. இன்தயும் கேட்டுக் கொண்டு போ” சிறிது தூரம் நடந்து சென்று விட்ட அவனை மீண்டும் கை நீட்டிக் கூப்பிட்டார் இடையாற்று மங்கலம் நம்பி. அவன் திரும்பி நடந்து வந்தான்.

நாஞ்சில் நாட்டு வேளாளப் பெரு மக்கள் நெல் போட்டு வைத்திருக்கப் பயன்படும் குறுகிய தாழி ஒன்று உருண்டு உருண்டு வருவது போல் அந்தக் குட்டை இளைஞன் நடப்பது பார்ப்பவர்களுக்குச் சிரிப்பை மூட்டியது.

“சேந்தா! நானும் குழல்மொழியும் இங்கே விழிளுத்துக்கு வந்திருக்கும் செய்தியை வேறு யாரிடமும் சொல்லி விடாதே. எச்சரிக்கையாக நடந்து கொள்! நானும் குழல் மொழியும், ‘கப்பலில் வருகின்றவரும் திரும்பிச் செல்கிற வழியில் சுசீந்திரம் தானுமாலய விண்ணகரத்தில் சிறிது நேரம் தங்கித் தரிசித்துவிட்டுப் போகலாம் என்று நினைத்திருக்கிறேன். இரவு மாளிகைக்கு வருவதற்கு முன்பே அவசரமான செய்தி ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டியிருந்தால் சுசீந்திரத்துக்கு ஒரு நடை வந்து சொல்லிவிட்டுப் போ’ என்று அவன் காதருகே குனிந்து தணிந்த குரலில் கூறினார் அவர். அவனுடைய உருண்டைத் தலையும் அதில் முடியப்பட்டிருந்த குடுமியும் சம்மதத்துக்கு அறிகுறியாக அசைந்தன. “சரி! அவ்வளவுதான். போய்வா” என்றார் அவர்.

துறைமுகத்தின் சுங்கச் சாவடிக்கு அருகில் கட்டியிருந்த தன் குதிரையை அவிழ்த்து அதன் மேல் தாவி ஏறிக் கொண்டான் அந்தக் குட்டை இளைஞன். குதிரை சாலையில் திரும்பி வேகமாகச் சென்றது. வாமனாவதாரம் போன்ற அந்தக் குறள் வடிவ இளைஞன் குதிரைக் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு சவாரி செய்யும் காட்சியைத் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் வியப்புடன் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனது குதிரை கிழக்கே காந்தளூர் இராஜ பாட்டையில் திரும்பிக் கன்னியாகுமரியை நோக்கி விரைந்து சென்றது.