பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

629


பேசவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாள். அவன் இடையாற்றுமங்கலத்திலிருந்து சொல்லிக்கொள்ளாமல் வந்து விட்டதற்காகத் தன் மேல் கோபம் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தான் இராசசிம்மன். அந்தப் பெண்மைத்தனமான பொய்க் கோபம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அந்தச் சமயத்தில் சேந்தன் அருகில் வந்து கூறலானான் - குமார பாண்டியருக்கு மிக அவசரமான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். இங்கேயிருக்கும் கடற்படை வீரர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் அநியாயமாக எங்களைத் தடுத்து நிறுத்தித் தாமதமாக்கிவிட்டார்கள். நாங்கள் உங்களைத் தேடி வந்த காரியம் மிக முக்கியமானது. அவசியத்தோடு கூடிய அவசரம் நிறைந்தது. மகாமண்டலேசுவரர் எங்களை அனுப்புவதற்கு முன் இந்த அவசரத்தை மிகவும் வற்புறுத்தியிருக்கிறார்.” -

சேந்தன் இராசசிம்மனிடம் இப்படிச் சொல்லிக் கொண்டி ருக்கும்போது சக்கசேனாபதியும் அங்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் நாராயணன் சேந்தன் பேச்சை நிறுத்திவிட்டான். குழல்வாய்மொழி மருண்டு நின்றாள்.

“நான் எதிரிகளின் கப்பல் ஒன்றை நினைத்து இந்தக் கட்டளை இட்டிருந்தேன். இவர்கள் விவரம் தெரியாத குறையினால் உங்கள் கப்பலைத் தடுத்து நிறுத்தி, அநாவசியமாக உங்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து விட்டார்கள். நீங்கள் இருவரும் தயவு செய்து மன்னிக்க வேண்டும்” என்று வந்து நின்றவுடன் சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் மன்னிப்புக் கேட்டார் அவர். மன்னிப்புக் கேட்டவருக்குக் கேட்கப்பட்ட இருவருமே பதில் எதுவும் சொல்லவில்லை.

இரண்டு மூன்று விநாடிகள் அமைதியில் கரைந்தன. “சேந்தா, மகாமண்டலேசுவரர் ஏதோ அவசரமான செய்தி சொல்லி அனுப்பியிருக்கிறாரென்றாயே! அதை இன்னும் நீ எனக்குச் சொல்லவே இல்லையே?’ என்று அந்த அமைதியைக் கலைத்து இராசசிம்மன் கேட்டான்.

“மன்னியுங்கள், அதை உங்களிடம் கூறுவதற்கு நீங்கள் என்னோடு இப்படிக் கொஞ்சம் தனியே வரவேண்டும்.”