பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

631


கொண்டிருந்தார். வேறொரு பக்கமாகப் பாய்மரத்தில் சாய்ந்தபடி அவளும் போய் நின்றுகொண்டாள்.

‘அம்மா! நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். உண்மையை எனக்குத் தெரிவித்துவிட்டால் நல்லது. இதே கப்பலில் உங்களோடு யாரோ ஒர் இளைஞனும் வந்தானாமே? இப்போது அவன் எங்கே தப்பி ஓடினான்? அவனாகத் தப்பி யிருந்தாலும், நீங்களாகத் தப்பவிட்டிருந்தாலும் நடந்ததை மறைக்காமல் என்னிடம் கூறிவிடுங்கள். அந்த வாலிபன் யாரென்பதையும் எனக்குச் சொல்லிவிடுங்கள்” என்று சக்கசேனாபதி குழல்வாய்மொழியிடம் கேட்டார்.

“எனக்கு ஒன்றும் தெரியாது, எல்லாம் அந்தக் குட்டை மனிதரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இப்போது அவர்தான் இங்கே சர்வாதிகாரி!” என்று எரிச்சலோடு பதில் சொன்னாள் அவள். அதே சமயத்தில் சேந்தன் பின்தொடர இராசசிம்மன் அங்கே வந்தான். அவன் முகம் இருண்டிருந்தது. “சக்கசேனாபதி! மிக அவசரமான சூழ்நிலை என்னை இப்பொழுது அழைக்கிறது. நான் உடனே இதே கப்பலில் தாய்நாடு திரும்பப் போகிறேன். காசிப மன்னர் எனக்கு வாக்களித்தபடி இன்னும் எட்டு நாட்களுக்குள் ஈழத்துப் படையோடு உங்களை எனக்கு உதவியாக அனுப்புவார்” என்று பதற்றத்தோடு கூறினான் இராசசிம்மன்.


10. பயங்கர உண்மை

இராசசிம்மன் பதற்றத்தோடு ‘இப்போதே தாய்நாடு திரும்பப் போகிறேன்’ என்று கூறியதைக் கேட்டதுமே சக்கசேனாபதிக்கு நிலைமை புரிந்துவிட்டது. ‘தென்பாண்டி நாட்டில் பகைவர் படையெடுப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறது போலும்’ என்பதை அவரால் உணர முடிந்தது.

சேந்தன் சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்த தன்னுடைய கப்பல் ஊழியர்களையும் மாலுமிகளையும் கூப்பிட்டு, “பாய் மரங்களைச் சரிசெய்து பாய்களை விரியுங்கள். இன்னும் சிறிது