பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

638

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


கப்பல் செல்கிற வேகத்தில் மயக்கம் உண்டாகிறதா?’ என்று சேந்தன் கேட்டான்.

“ஐயோ! இதென்ன? இப்படி அல்லித் தண்டு மாதிரித் துவண்டு விழுகிறீர்களே? உங்கள் உடம்புக்கு இருந்தாற் போல் இருந்து என்ன வந்துவிட்டது?” என்று கூறிக் கொண்டே கீழே குனிந்து ஆதரவாகக் குமாரபாண்டியனின் உடம்பைத் தாங்கிக் கொண்டாள் குழல்வாய்மொழி.

குமாரபாண்டியன் விழிகள் இமையாமல் சூன்யத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே தலையில் வைத்த கைகளை எடுக்காமல் நெடுநேரம் கிடந்தான்.

பின்பு நிதானமாக வாய் திறந்து அவர்கள் இருவரையும் பார்த்து ஒவ்வொரு வார்த்தையாகச் சொன்னான்: “தமனன் தோட்டத்துக்கும் பொலன்னறுவைக்கும் இடையிலுள்ள காட்டில் மரணமென்று அந்தப் பெண்ணுக்கு விதி இருந்தது போலிருக்கிறது. பாவம்! இங்கிருந்து தப்பியோடி என்னைச் சந்திக்க வந்த வழியில் இயற்கையின் கூத்துக்குப் பலியாகி இறந்துபோய் விட்டாள் அவள்!”


11. படைகள் புறப்பட்டன

வடதிசை மன்னர்களின் பெரும் படையை அணி வகுக்கவும் திட்டமிடவும், கொடும்பாளுரில் இரண்டு மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. தெற்கேயுள்ள குழப்பமான நிலைகள் ஒவ்வொன்றாகத் தெரியத்தெரிய வடதிசையரசர்களின் மனத்திடம் அதிகமாயிற்று.

படையெடுப்புக்கு முன்னால் கடைசியாக அவர்களுக்குக் கிடைத்த செய்தி ‘மகாமண்டலேசுவரருக்கும், தென்பாண்டி நாட்டின் ஏனைய கூற்றத் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது’ என்பது ஆகும்.

“இராசசிம்மன் அரசுரிமைப் பொருள்களைத் திருடிக் கொண்டு ஓடிப்போய்விட்டான். முத்துக்குளி விழாவில் குழப்பம் நடந்துவிட்டது. மகாமண்டலேசுவரரைக் கூற்றத் தலைவர்கள்