பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

63


அவனைப் புகழுவதுண்டு. அதற்கு முற்றிலும் தகுதியானவன் தான் அவன்.

அன்று மாலை ‘விழிஞம்’ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நாராயணன் சேந்தன், மகாராணியாரும் அவருடைய பரிவாரமும் கன்னியாகுமரியை அடைவதற்கு முன்பே தான் அங்குப் போய் ச் சேர்ந்துவிட்டான். குதிரையோடு ஆலயத்த ருகே போய் இறங்கினால் தன் வரவை வெளிப்படையாகப் பலருக்கு அறிவித்தது போல் ஆகிவிடுமென்று அவன் அறிவான். கூடியவரை தன்னை அங்கே யாரும், எதற்காகவும் தெரிந்து கொள்ளக்கூடாது; ஆனால், தான் எல்லாவற்றையும் எல்லோரையும் தெரிந்து கொள்ளவேண்டுமென்பது அவனுடைய நோக்கம். கோவிலின் மேற்குப் புறமாகக் கடற்கரையோரத்தில் இருந்த புன்னைமரச்சோலை ஒன்றுக்குள் நுழைந்து ஒரு மறைவான இடத்தில் குதிரையைக் கட்டினான்.

பின்பு சிறிது நேரம் அந்தச் சோலையிலேயே இங்கும் அங்குமாகச் சுற்றினபோது, ஒரு பெரிய மரத்தின் அடியில் சில ஆடைகளும், அங்கிகளும், மூன்று சிவப்புத் தலைப்பாகைகளும் களைந்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான்.

‘இவைகளை யார் இங்கே வைத்திருக்கக்கூடும்?’ என்ற சந்தேகத்தோடு நாராயணன் சேந்தன் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். புன்னைமரத் தோட்டத்தின் வேலிக்கு அப்பால் கடலில் கரையோரமாக மூன்று மனிதர்கள் நீராடிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டான். மரத்தடியில் அவிழ்த்து வைக்கப்பட்டிருந்த அந்த உடைகளும் தலைப்பாகைகளும், அவர்களுடையனவாகத்தான் இருக்க வேண்டுமென்று நாராயணன் சேந்தன் புரிந்து கொண்டான். சாதாரண மனிதர்கள் அணியக் கூடிய உடைகளாகத் தெரியவில்லை அவை. அரசாங்கப் பணி புரியும் வீரர்களோ, சேவகர்களோ, அணியக் கூடிய உடையாகத் தோன்றின அவை. புறத்தாய நாட்டு வீரர்களும், பாண்டி நாட்டின் பிற பகுதிகளிலுள்ள படை வீரர்களும் வழக்கமாக அணியக் கூடிய உடை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் புன்னை