பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 549

“தெரியவில்லையா? நீ செய்தவற்றில் எது ஒழுங்கு எது தவறு என்று உனக்கே பகுத்துணர முடிந்தால்தானே உன் குற்றங்களை நீ தெரிந்துகொள்ள முடியும்! முதன்முதலாக என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் இடையாற்று மங்கலத்திலிருந்து ஓடி வந்தாயே, அந்த இரவிலிருந்தே உன் தவறுகள் ஆரம்பமாகிவிட்டன. அரண்மனையில் உளவறிவதற்கு ஆபத்துதவிகள் தலைவனை உன் கையாளாகப் பயன்படுத்தினாய். இடையாற்று மங்கலத்தில் என் மாளிகையிலிருந்து இரவோடு இரவாக ஆயுதங்களைத் திருட ஏற்பாடு செய்தாய்! குமாரபாண்டியரை அழைத்துவர நான் ஒருவன் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதை நம்பாமல் நீ உன் தங்கையை அனுப்பினாய்.”

“இதே வகையில் எனக்குத் தாங்களும் சில தவறுகளையும் குற்றங்களையும் செய்திருக்கிறீர்களென்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.”

“செய்திருக்கலாம் மறுக்கவில்லை. எனக்குப் பொறுப்புகள் அதிகம். என் நிர்வாகம் பெரியது. நான் உன்மேல் சந்தேகப்பட்டு உன்னைச் சோதனை செய்திருந்தால் அது நியாயமானது. படைகளைத் தவிர வேறெந்தப் பொறுப்பையும் பற்றிக் கவலைப்பட வேண்டாத நீ, அநாவசியமான கவலைகளை உண்டாக்கிக்கொண்டு இப்படியெல்லாம் செய்தது மன்னிக்க முடியாத தவறு.” . .

“நான் நினைத்தால் இன்னும் ஒரு பெரிய தவற்றையும் செய்ய முடியும். இப்போதே ஒடிப்போய் என் அதிகாரத்துக்கு அடங்கிய அத்தனை படைகளையும் போர் முனைக்குப் போகாமல் தடுத்து நிறுத்திவிட முடியும். மகாமண்டலேசுவரர் அப்போது என்னைக் கெஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை.” “கனவிலும் அப்படி நினைக்காதே, தளபதி ! உன்னால் அதைச் செய்ய முடியாது. நீ இப்போது என் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நிற்கும் சாதாரணக் குற்றவாளி. அகந்தையினால் உன் நிலையைப் புரிந்துகொள்ளாமல் பேசாதே!”

“முடிகிறதா, இல்லையா என்றுதான் பாருங்களேன்” எனத் தன்மானத்தோடு சொல்லிவிட்டு வெளியேறினான் அவன்.