பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

பாண்டிமாதேவி / முதல் பாகம்


மரத்தடியில் கண்ட உடைகளும் அப்படி இருந்திருந்தால், ‘சரிதான்! யாரோ பாண்டி நாட்டு வீரர்கள் உடைகளைக் கழற்றி வைத்து விட்டு நீராடிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு போயிருப்பான், ஆனால் அந்த மாதிரி உடையணிந்த வீரர்களை அவன் பாண்டி நாட்டுப் படையில் எங்கும், எப்போதும் கண்டதே இல்லை. ஆகவே, அருகில் நெருங்கி உற்றுப் பார்த்தான். தலைப்பாகைகள் மூன்றில் ஒன்றுக்குள் செருகி வைக்கப்பட்டிருந்த ஒர் ஒலை நாராயணன் சேந்தனின் கூரிய விழிகளில் தென்பட்டது. சட்டென்று குனிந்து அதைக் கையில் எடுத்தான்.

அந்த ஒலையைப் படிப்பதற்குள் வேலிக்கு அப்பால் மணலில் ஆட்கள் நடந்து வரும் ஒலி கேட்டது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். கடலில் குளித்துக் கொண்டிருந்த மூன்று வீரர்களும் தங்கள் உடைகளை அணிந்து கொள்வதற்காக மரத்தடிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கையில் எடுத்த ஒலையை அது முன்பிருந்தபடியே தலைப்பாகைக்குள்ளேயே வைத்து விட்டு வேலி ஒரமாகப் பதுங்கினான் நாராயணன் சேந்தன்.

அதன்பின் அன்று கன்னியாகுமரியில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவன் மறைந்திருந்து கவனித்தான். மகாராணி யார் கடற்கரைக் காட்சியைக் கண்டது, தளபதி ஒற்றர்களோடு போரிட்டது, ஒலையைக் கைப்பற்றியது, கன்னியாகுமரி அம்மன் ஆலயத்தில் வானவன்மாதேவிக்கு ஏற்பட்ட துன்பம் ஆகியவையெல்லாம் ஒன்று விடாமல் தெரிந்து கொண்டான்.

மகாராணியாரும் பரிவாரமும் ஆலயத்திலிருந்து கோட்டைக்குத் திரும்பிய போது அவனும் பின்னாலேயே புறப்பட்டு விட்டான். சுசீந்திரத்தை அடைந்தவுடன் மகாமண்டலேசுவரர் தம்மைச் சுசீந்திரத்தில் சந்திக்கச் சொல்லியிருந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. உடனே மகாராணியாரைக் கோட்டைக்குப் போகும் சாலையில் பின்பற்றுவதை நிறுத்திக் கொண்டு, சுசீந்திரம் கோவிலுக்குத்