பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


எனக்கு. நான் போருக்குத் தலைமை தாங்கலாமா, இல்லையா என்பதைக் குமாரபாண்டியர் வந்து விசாரித்துத் தீர்ப்புக் கூற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம் ?” என்று ஆபத்துதவிகள் தலைவனிடம் தம் மனக்குமுறலை வெளியிட்டான் தளபதி வல்லாளதேவன். அதைக் கேட்டுவிட்டுக் குழைக்காதன் கூறினான்:

“மகாமண்டலேசுவரர் ஒருவரை மட்டும் மனத்தில் வைத்துக் கொண்டு தாங்கள் அப்படியெல்லாம் செய்துவிடக் கூடாது. தங்கள் தங்கையார் மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சிகளையும், சர்வாதிகார மனப்பான்மையையும் குமார பாண்டியரிடம் இதற்குள் விவரித்துச் சொல்லியிருக்கலாம். அதைக் கேட்டு குமாரபாண்டியரே மகாமண்டலேசுவரர் மேல் நம்பிக்கை இழந்திருப்பார்” . -

“அப்படிச் சொல்வதற்கில்லை, குழைக்காதரே! குமார பாண்டியருடைய மனத்தை என் தங்கை பகவதி எவ்வளவு தான் மாற்றியிருந்தாலும் இங்கு வந்து இறங்கியவுடன் மகாராணியாரும், மகாமண்டலேசுவரரும் சொல்கிறபடி தான் கேட்பார் அவர். ஆகவே, இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே காரியம்தான். மகாமண்டலேசுவரர் என்ற இறுமாப்பு சக்தியை ஒரேயடியாக வீழ்ச்சியுறச் செய்துவிட வேண்டும்.”

“முயன்று பார்க்கலாம். அதோ அவர்கள் கப்பலை நெருங்கி விட்டார்கள். வாருங்கள், நாமும் போகலாம். மற்றவற்றைப் பின்பு பேசிக்கொள்வோம்” என்று கூறித் தளபதியையும் கூட்டிக்கொண்டு துறையில் வந்து நின்ற கப்பலை நோக்கிச் சென்றான் குழைக்காதன். - - .

தளபதிக்கும், குழைக்காதனுக்கும் இருளும் மழையும் போதுமான அளவு மறைந்து செல்வதற்கு ஒத்துழைத்தன. கப்பல் நின்றுகொண்டிருந்த துறைக்கு அருகில் ஒரு பாறை மறைவில் அவர்கள் இருவரும் மறைவாக நின்று கொண்டனர். அந்த இடத்தில் நின்றுகொண்டு கப்பலிலிருந்து இறங்குபவர்களை அவர்கள் பார்க்க முடியும். அங்கே பேசுகிற பேச்சையும் கேட்க முடியும். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மறைவிடம் அது.