பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

669


“சுவாமி! தளபதி வல்லாளதேவனைப் போர்க்களத்துக்கு அனுப்பியிருக்கிறீர்களா?” என்று கேட்டான் இராசசிம்மன்.

“இல்லை! கோட்டாற்றுப்படைத் தளத்தில் தனியே சிறைப்படுத்தி வைத்திருக்கிறேன். இதைக் கேட்டு ஆச்சரியப்படாதே, இந்த உண்மையும் இப்போதைக்கு உன் மனத்தோடு இருக்கட்டும்.”

“இதெல்லாம் என்ன விபரீதங்களோ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே?”

“கவலைப்படாதே, இராசசிம்மா! எல்லாம் போகப் போக விளங்கும்.”

அவர் இப்படிச் சொல்லி வாய் மூடவில்லை. அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தை ஒட்டி அமைந்த பாறையின் மறுபுறமிருந்து தேங்காய் பருமனுக்கு ஒரு கல் ‘விர்'ரென்று வீசி எறியப்பட்டுப் பறந்து வந்தது. அந்தக் கல் மகாமண்டலேசுவரரின் மகுடத்தில் விழுந்து அதைக் கீழே வீழ்த்தியது. குமாரபாண்டியன் வாளை உருவிக் கொண்டு ஓடினான். ஒசை கேட்டுச் சேந்தனும் ஓடிவந்தான்.

“நில்லுங்கள். மகுடம் தான் விழுந்தது. என் தலை இன்னும் இருக்கிறது!” என்று சிரித்துக் கொண்டே அவர்களைத் தடுத்து நிறுத்தினார் மகாமண்டலேசுவரர். பாறையின் மறுபுறத்திலிருந்து யாரோ இருவர் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் ஓசை கேட்டது.


15. ஒரு பிடி மண்

“சுவாமி! இதென்ன அநியாயம்? எவனோ அக்கிரமம் செய்துவிட்டு ஓடுகிறான். அவனைப் பிடிக்கலாமென்றால் போகவிடமாட்டேன் என்கிறீர்கள்!” என்று இராசசிம்மனும் சேந்தனும் மகாமண்டலேசுவர்ரோடு மன்றாடிக் கொண்டி ருந்தபோது அவர் பதில் சொல்லாமல் இருட்டில் கீழே விழுந்த மகுடத்தைத் தேடி எடுத்து அணித்து கொண்டார்.