பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

685


தேசத்தையே மலைக்கச் செய்த அந்த அறிவு தனக்காகவும் சிறிது மலைத்தது. ஆனால் அதன் ஒரு சிறு சாயை கூட வெளியில் தெரிந்து கொள்ளுமாறு காட்டப்படவில்லை. இதுவரை பிறருடைய உணர்ச்சிகளைக் கலக்கி ஆழம்பார்த்த மனம் இப்போது உணர்ச்சிகளால் கலங்கியது.

குமாரபாண்டியனுடைய கப்பல் வந்த பின் நேர்ந்த நிகழ்ச்சிகள் ஒவ்வோர் உள்ளத்திலும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளைக் குமுறச் செய்திருந்தன. தெய்வத்துக்கும் மேலாக மதித்து, தான் பக்தி செலுத்திப் பணிபுரிந்து வந்த மகாமண்டலேசுவரரின் மேல் கல்லெறிந்துவிட்டு ஒடியவர்களைப் பிடித்துக் கட்டிவைத்து உதைக்க முடியாமல் போய்விட்டதே என்று சேந்தன் கொதித்தான். சேந்தன் வீர வணக்கம் செய்யும் பிடிவாதக் குணமுடையவன். தன்னை முழுவதுமே ஒரே ஒரு மனிதருக்கு மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் அடிமையாக்கிக் கொண்டிருந்தான் அவன். காலஞ்சென்ற தன் தந்தைக்கும் முன் சிறையில் அறக் கோட்ட மணியக்காரனாக இருக்கும் தன் தமையனுக்கும்கூட இவ்வளவு அடங்கி ஒடுங்கிப் பணிவிடை புரிந்ததில்லை அவன். மகாராணி, குமாரபாண்டியன் ஆகியவர்களிடம் அவனுக்கு அன்பும், மரியாதையும் மட்டும்தான் இருந்தன. மகாமண்டலேசுவரர் என்ற ஒரே ஒரு மேதையிடம்தான் வசப்பட்டு மெய்யடிமையாகிக் கலந்திருந்தான். எவராலும் மாற்ற முடியாதபடி இந்த வீர வணக்கப் பண்பு அவனிடம் பதிந்து விட்டது. உலகம் முழுவதுமே மகாமண்டலேசுவரருக்கு எதிராகத் திரண்டு வந்தாலும் மூன்றரை முழ உயரமுள்ள அந்தக் குள்ளன் அவர் அருகில் மெய்க்காவலனாக நின்று கொண்டிருப்பான். மகாமண்டலேசுவரருடைய செல்லப் பெண் குழல்வாய்மொழிக்குக்கூட அவர் முகத்தை மட்டும் தான் பார்க்கத் தெரியும். ஆனால் சேந்தன் அவருடைய அகத்தையும் நெருங்கி உணர முடிந்தவன்.

அதனால்தான் மகாமண்டலேசுவரர் அவமானப்பட நேர்ந்ததைக் கண்டு,அவன் உள்ளம் அவ்வளவு அதிகமாகக் குமுறியது. குமார பாண்டியனும் அதைக் கண்டு மனம் கொதித்தானென்றாலும், அந்தக் கொதிப்பு எவ்வளவு வேகமாக