பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பாண்டிமாதேவி / முதல் பாகம்


பள்ளமாக இருக்கவேண்டும். இல்லையானால் வெள்ளம் இழுத்துக் கொண்டு போவதுபோல் அப்படி ஆளை இழுத்துப் பறிக்குமா ? நிமிர்ந்தால் தலைமேலே மதிற்.சுவரின் அடிப்பாகத்தில் இடித்தது. இரண்டு விலாப்புறமும் பக்கச் சுவர்களில் உரசின. பருத்த தேகத்தை உடைய அவனுக்கு மூச்சுத் திணறியது, விழிகள் பிதுங்கின. ஐயோ, மறுபுறம் போய்க் கரையேறுவதற்குள் மூச்சுத் திணறிச் செத்துப் போய்விடுவேன் போலிருக்கிறதே, இந்தப் பாழாய்ப்போன கால்வாய் வழியாக உள்ளே போக வேண்டுமென்ற ஆசை எனக்கு ஏன்தான் உண்டாயிற்றோ? இடைவழியிலேயே இந்த இருண்ட கால்வாய்க்குள் நம்முடைய உடல் செருகிச் சிக்கிக் கொண்டாலும் ஏனென்று கேட்டார் இல்லையே?’ என்று தனக்குள் எண்ணித் துணுக்குற்றான் அவன். வேகமாக உள்நோக்கிப் பாயும் நீரோட்டம் ஓர் இடத்திலும் பாதங்களை ஊன்றி நிற்க விடாமல் அவனை இழுத்துத் தள்ளிக் கொண்டு போயிற்று.

நாராயணன் சேந்தன் மதிலின் உட்புறம் நந்தவனத்தில் வந்து கரையேறிய அதே சமயத்தில் வெளிப்புறம் கால்வாய் தொடங்குமிடத்தில் திடும்திடு மென்று தண்ணீரில் ஆட்கள் குதிக்கின்ற ஓசை உட்புறமிருந்த அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. தன்னைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் தான் குதித்திருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் உடனே நந்தவனத்திலிருந்த ஒரு பெரிய மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான், அது ஒரு மகிழ மரம். அதில் அவன் உட்கார்ந்து கொண்டிருந்த கிளை அரண்மனை நிலாமுற்றத்தைத் தொடுவதுபோல் நெருக்கமாகப் படர்ந்திருந்தது. அந்தக் கிளையில் அமர்ந்து கால்வாயை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் வழியே தன்னைப் பின்தொடர்ந்து குதித்து வந்த மனிதர்களின் வரவை எதிர்பார்த்து, அந்தத் திசை நோக்கி இமையாமல் காத்திருந்தன அவன் விழிகள். அந்த நடு இரவில் நிலா முற்றத்தில் பாட்டொலியும், நடன ஒலியும் கேட்பதை அவன் செவிகள் கூர்ந்து கவனித்தன. மேலே நிலா முற்றத்தில் மகாராணியாரும்,