பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி Ꮾ99

சுட்டிக்காட்டிச் சொன்னார் அவர். அப்போது அவருடைய முகத்தில் மலர்ந்த சிரிப்பில் கருணைபூத்திருந்தது. சேந்தன் பேசும் உணர்விழந்து நின்றான்.

“என்னோடு வா!” என்று அவனைக் கைப்பற்றி அழைத்துச் சென்று சிவ ஆலயத்துக்கு முன் குறட்டில் கொண்டுபோய் உட்கார வைத்துவிட்டுத் தாமும் எதிரே உட்கார்ந்தார். அப்போது ஒளி மங்கி இருள்சூழ ஆரம்பித்திருந்த சமயம். காற்று இதமாகக் குளிர்ந்து வீசிக்கொண்டிருந்தது. சிவாலயத்துக்குள்ளிருந்து அகிற்புகையின் மணமும் மலர்களின் வாசனையும் கலந்து வெளிவந்து பரவின. அந்த அற்புதமான சூழலில் இடையாற்றுமங்கலம் நம்பியின் குரல் சேந்தனை நோக்கி ஒலித்தது.

“சேந்தா, கேள்! நீயும் உன் மனமும் எந்தப் பேரறிவின் முன்னால் பணிந்து வீர வணக்கம் செலுத்தி வருகிறீர்களோ அந்த அறிவு இப்போது அழிந்துவிட்டது. அல்லது தன்னை அழித்துக்கொண்டுவிட்டது என்று வேண்டுமானால் வைத்துக்கொள். கயிற்றால் கட்டப்பட்டுக் கையும் காலும் ஆடும் மரப்பாவை கயிற்றின் இணைப்பறும்போது ஆட்ட மற்றுப் போவதுபோல் நம் வினைகளின் கழிவுகாலத்தில் அறிவும் மனிதனுக்குப் பயன்படுவதில்லை. இந்த உண்மையைத் தெரிந்துகொள்ள எனக்கு எத்தனை காலம் வாழ்ந்து பார்க்க வேண்டியிருந்தது. அப்பா! அறிவு அளவற்றுப் பெருக்கிக் கூர்மையாகும்போது அதை நமக்களிக்கும் தெய்வத்தை நோக்கிச் செலுத்தும் பக்தியாக மாற்றிக்கொண்டு விட வேண்டும். அதை நான் செய்யத் தவறிவிட்டேன். கத்தியை நீட்டிப் பயமுறுத்தும் வழிப்பறியாளனைப்போல் என் அறிவைப் பிறர் அஞ்சும் கருவியாக்கினேன். அளவற்ற அறிவின் கூர்மைக்கு எதிரிகளும், பொறாமைப்படுபவர்களும் ஏற்படாமலிருக்க வேண்டுமானால் அதைப் பக்தியாக மாற்றிக்கொண்டு விட வேண்டும். நான் இறுமாந்து செம்மாந்து திரிந்தேன். என் கண் பார்வையால் மனிதர்களை இயக்கினேன். நல்வினை துணை நின்றவரையில் என் அறிவு பயன்பட்டது. தளபதியும் கழற்கால் மாறனாரும்