பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


என்மேல் அசூயைப்படத் தொடங்குகிற சமயத்திலேயே என் நல்வினையின் விளைவு குன்ற ஆரம்பித்துவிட்டது.

“நான் சிறைப்படுத்தி வைத்த தளபதி தப்பிவந்தான். நான் தந்திரமாக அடக்க எண்ணிய ஆபத்துதவிகள் தலைவனோடு சேர்ந்துகொண்டான். நான் மறைக்க விரும்பிய பகவதியின் மரணத்தைத் தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனுமே கேட்டுத் தெரிந்துகொண்டு என்மேல் கல்லெறிந்து விட்டு ஓடினார்கள். உங்கள் கப்பலில் உங்களோடு தற்செயலாக மாறுவேடத்தில் வந்து தன் திமிரால் இறந்துபோன பகவதி என் சூழ்ச்சியினால் கொல்லப்பட்டாளென்றே தளபதி நினைத்துவிட்டான். என் நல்வினை கழிகிற காலம் வந்ததனால்தான் அவன் மனத்தில் இந்த நினைவு உண்டாயிற்று. இப்போது அவனும் கழற்கால் மாறனார் முதலியவர்களும் ஒன்று சேர்ந்து என்னை அழிக்க முயன்று திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். அதை எதிர்த்துச் சூழ்ச்சி செய்ய என் அறிவுக்கு இப்போது ஆற்றலில்லை. நல்வினைப் பயனை அது இழந்துவிட்டது. ஒவ்வொருவருடைய அறிவுக்கும் ஆகூழ் (வளர்ச்சி) போகூழ் (அழிவு என இரண்டு நிலைகளுண்டு. எனக்கு இப்போது போகூழ் நிலை. என் அறிவு இனிமேல் பயன்படாது. என் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கே பயப்படுகிறவர்கள் என் நெஞ்சுக்குக் குறிவைத்துக் கத்தியை ஓங்கவும், தலையில் கல்லெறியவும் துணிந்து விட்டார்களென்றால், என் அறிவு அவர்களைத் தடுக்கும் நல்வினைத் துணையை இழந்துவிட்டது என்றுதான் பொருள். அதன் விளைவாக இந்தத் தெண்பாண்டி நாட்டுக்கே துன்பங்களை வளர்த்துவிட்டேன் நான். பக்தியாக மாறாத காரணத்தால், ஞானமாகப் பழுக்காத இயல்பால் எத்தனை பிரிவினைச் சக்திகளை இங்கே உண்டாக்கிவிட்டது என் அறிவு: தளபதியின் முரட்டு வீரத்தைப் போலவே என் முரட்டு அறிவும் எவ்வளவு கெடுதலானதென்பதை இன்று உணர்கிறேன். ஆனால் இது காலங்கடந்த உணர்வு. மகாமண்டலேசுவரர் என்ற அந்தப் பதவியை ஏற்றுக்கொண்ட காலத்திலேயே எனக்கு இந்த உணர்வு இருந்திருந்தால் எவ்வளவோ பயன்பட்டிருக்கும். ஒழுக்கம், நேர்மை, அறிவின் அகந்தை அழியாத தெய்வபக்தி இவற்றை வைத்துக் கொண்டிருந்தேன். இது வரை இடையாற்று