பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

703


என்பதுதான். இதை மாற்ற முடியாது. எழுந்திரு!’ சிரித்தவாறே கூறினார். அந்தச் சிரிப்பு-அது ஊழிக் காலத்தின் புன்னகையா?


20. தீவினை பரவுகிறது

புவனமோகினி பேயறைபட்டு ஓடி வருகிறவளைப் போல் ஓடிவந்ததைக் கண்டவுடன் மகாராணி, குழல்வாய் மொழி, விலாசினி எல்லோரும் திகைப்போடு விரைந்து வந்து அவளைச் சூழ்ந்துகொண்டனர்.

“என்னம்மா? ஏன் இப்படி நிலைகெட்டுத் தடுமாறி ஓடி வருகிறாய்? என்ன நடந்தது?” என்று அந்தப் பெண்ணை நிறுத்தி நிதானப்படுத்தி விசாரித்தார்கள், பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும். பயந்து வெளிறிய கண் பார்வையால் தன்னைச் சூழ்ந்து நின்றவர்களை ஒவ்வொருவராகப் பார்த்தாள் புவனமோகினி. மகாராணியாரையும் விலாசினியையும் பார்த்துவிட்டுக் குழல்வாய்மொழியின் மேல் அவள் பார்வை திரும்பியபோது அவள் கண்கள் சுருங்கி வெறுப்புப் படர முகம் சிறுத்தது. அவளைப் பார்க்க விருப்பம் இல்லாதவள்போல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு விட்டாள் புவனமோகினி.

இதைக் கண்டு குழல்வாய்மொழியின் உள்ளம் அவமானப்பட்டுவிட்டது போலக் கொதித்தது. புவனமோகினி என்ற சாதாரணமான வண்ணமகள் தன்னிடம் இப்படி நடந்து கொண்டாளே என்று வேதனையாக இருந்தது அவளுக்கு. “பகவதியைப்பற்றி விசாரித்துக்கொண்டு வரப்போன புவனமோகின் உண்மையைத் தெரிந்துகொண்டு வந்துவிட்டாளோ? அதனால்தான் என் முகத்தை இப்படி வெறுப்போடு பார்க்கிறாள் போலும்! ஐயோ, நான் ஏன் இந்தச் சமயத்தில் இங்கே இருக்க நேர்ந்தது? நான் மறைத்து வைத்த உண்மை என் முன்னாலேயே வெளிப்பட்டு என்னைத் தலைகுனிய வைக்க வேண்டுமா!” என்று மனதுக்குள் எண்ணிப் பதற்றமடைந்தாள் குழல்வாய்மொழி.