பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


“வண்ணமகளே! ஏன் இப்படிப் பதற்றமும் பயமும் அடைந்து வாய் பேசாமல் நிற்கிறாய்? நீ பகவதியைப் பற்றி விசாரித்துக்கொண்டு வரச் சென்ற இடத்தில் என்ன நடந்தது? சொன்னால்தானே எங்களுக்குத் தெரியும்? சொல் அம்மா!” என்று மகாராணி புவனமோகினியைக் கேட்டார். புவனமோகினி வெறுப்பும் அச்சமும் கலந்த முகபாவத்தோடு மறுபடியும் குழல்வாய்மொழியை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்துவிட்டுப் பதில் சொல்லத் தயங்குவதுபோல் நின்றாள். இனிமேலும் தான் அங்கேயே நின்றுகொண்டிருந்தால் வெளிப்படையாக அவமானப்பட்டுத் தலைகுனிய நேர்ந்துவிடும் என்று அஞ்சினாள் குழல்வாய்மொழி.

“உள்பக்கம் போய்விட்டு இதோ ஒரு நொடியில் வந்து விடுகிறேன்” என்று ஏதோ அவசர காரியமாகச் செல்கிற வளைப்போல் சொல்லிவிட்டு மெல்ல நழுவிச் சென்றாள் குழல்வாய்மொழி. முகத்திலோ, குரலிலோ, தான் அங்கிருந்து செல்வது மற்றவர்களுக்கு அநாகரிகமாகத் தோன்றிவிடுவதற்குரிய குறிப்பே காட்டாமல் சுபாவமாகச் சொல்கிறவளைப் போல் சிரித்துக்கொண்டே சொல்லி விட்டு உட்புறமாகச் சென்றுவிட்டாள் அவள், சென்றுவிட்டாள் என்று முடித்துச் சொல்வது தவறு. செல்வதுபோல் போக்குக் காட்டிவிட்டு அருகேயிருந்த ஒரு கதவுக்குப் பின் மறைந்து நின்று கொண்டாள். புவனமோகினி என்ன சொல்லப்போகிறாள் என்பதைக் கேட்டு அறிந்துகொள்ளும் ஆவல் அவளுக்கு இருக்குமல்லவா? செவிகளைக் கூர்மையாக்கிக்கொண்டு விநாடிக்கு விநாடி விரைவாகத் துடிக்கும் நெஞ்சத் துடிப்புடன் கதவு மறைவில் நின்றாள் அவள், - -

“இன்னும் ஏன் அம்மா தயங்குகின்றாய்? இடையாற்று மங்கலத்துப் பெண் இருக்கும்போதுதான் அவள் முகத்தைப் பார்த்துப் பேசக் கூசி மருண்டு நின்றாய்! அவளோ உள்ளே போய்விட்டாள். பயப்படாமல் நீ சொல்லவேண்டியதைச் சொல்லலாம்” என்று பவழக்கனிவாயர் புவனமோகினியைத் துண்டிக் கேட்டார்.