பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


“மகாராணியாரைச் சந்தித்து விடைபெற்றுக் கொள்ளாமல் போவதற்கு அவ்வளவு அவசரமான காரியம் என்னதான் வந்துவிட்டதோ? இருந்தாலும் இடையாற்றுமங்கலத்து நங்கைக்கு இவ்வளவு அலட்சியம் ஆகாது!” என்று உதட்டைக் கடித்துக்கொண்டு சொன்னாள் விலாசினி.

“பரவாயில்லை! அது அந்தப் பெண்ணின் சுபாவம். அதைப்பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. புவனமோகினி வந்து தெரிவித்த செய்திகள் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்; எல்லாவற்றையும் கேட்டு என் மனம் ஒரேயடியாகக் கலங்கிப் போயிருக்கிறது. போர்க்களத்திலிருந்து ஒரு தகவலும் இல்லை. இடையாற்றுமங்கலத்துக்குச் சென்றுவிட்டுக் கூடிய விரைவில் அரண்மனைக்கு வந்துவிடுவதாகச் சொல்லிச் சென்ற மகாமண்டலேசுவரரை இன்னும் காணோம்” என்று மகாராணி வானவன்மாதேவியார் கூறினார்.

“மகாராணிக்கு அந்தக் கவலை வேண்டாம். புவன மோகினி கூறியவை உண்மையா, இல்லையா என்பதை இன்று மாலைக்குள் நானும் அதங்கோட்டாசிரியர் பிரானும் விசாரித்துக் கூறிவிடுகிறோம்” என்று உறுதி தெரிவித்த பவழக்கனிவாயர் ஆசிரியரையும் அழைத்துக்கொண்டு அப்போதே வெளிக்கிளம்பினார். ஒரு நினைவிலும் மனம் பதியாமல் அவர்கள் உண்மையை விசாரித்துக்கொண்டு திரும்பும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் மகாராணி, விலாசினியும் புவனமோகினியும் உடனிருந்து ஆறுதல் தோன்றப் பேசிக்கொண்டிராவிட்டால் அன்றைய தினம் மகாராணிக்குத் தன் நினைவு தடுமாறிப் பித்துப் பிடித்திருக்கலாம். அந்த அளவுக்கு மனம் குழம்பியிருந்தது.

அந்தி மயங்கிய சிறிது நேரத்துக்குப் பின் பவழக்கனி வாயரும், அதங்கோட்டாசிரியரும் திரும்பி வந்தார்கள். அவர்கள் என்ன கூறப்போகின்றார்களோ என்று அறியப் பதை பதைத்துக்கொண்டிருந்தது மகாராணியின் நெஞ்சம். திரும்பி வந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சியோ, மலர்ச்சியோ தென்படவில்லை. வாட்டமே மிகுந்திருந்தது.