பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

710

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


நிலையில் விட்டுவிட்டு மறுபடியும் போர்க்களத்துக்குச் சென்றால், அங்கே குமாரபாண்டியனின் நிலையைப் பற்றிய விவரங்களை அறிந்துகொண்டுவிடலாம்.

நள்ளிரவில் படைவீரர்களின் பாசறைகள் இருந்த பகுதியில் கலவரமும் குழப்பமும் எழுந்தனவாகச் சென்ற பகுதியில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? “படை வீரர்களுக்குள் ஏதாவதொரு சாதாரணமான தகராறு உண்டாயிருக்கலாம். அதை நாமிருவரும் போய் உடனே தீர்த்துவிடலாம்” என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டு எழுந்து சென்ற குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் அங்கே போய்ப் பார்த்தவுடன் திடுக்கிட்டார்கள்.

படை வீரர்களல்லாத வெளி மனிதர்கள் பாசறைப் பகுதிகளில் வந்து வீரர்களைக் கூட்டம் கூட்டி ஏதேதோ கூறி மனத்தை மாற்றிக்கொண்டிருந்தார்கள். குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் அந்த இடத்தை அணுகியவுடன் ஒரே எதிர்ப்புக் குரல்களாக எழும்பின.

‘மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியமாட்டேன்” என்றது ஒரு குரல்.

“தளபதி வல்லாளதேவர் வராவிட்டால் நாளையிலிருந்து களத்தில் இறங்கிப் போர் செய்யமாட்டோம்!” என்றது மற்றொரு குரல். தொடர்ந்து அதே இரண்டு எதிர்ப்பு வாக்கிய ஒலிகள் நூற்றுக்கணக்கில் பெருகி ஒலித்தன. எந்தக் காரியங்களுக்காகப் பயந்து மகாமண்டலேசுவரர் தன்னிடம் வாக்குறுதிகள் வாங்கினாரோ அவை பயனில்லாமற் போய்விட்டதைக் குமாரபாண்டியன் அந்த நள்ளிரவில் அங்கு கண்டான்.


21. பொருள்மொழிக் காஞ்சி

சேந்தன் மகாமண்டலேசுவரரின் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தான்; கதறினான், அழுது அலறினான், தொழுது புலம்பினான். “சுவாமி! நான் ஒரு வ்கையிலும் தங்கள் குமாரிக்குத் தகுதியற்றவன். அழகும், இளமையும் நிறைந்த தங்கள்