பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


மகாமண்டலேசுவரர் சிவன் கோயில் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது இடையாற்றுமங்கலம் மாளிகை தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அழகான நந்தவனமும், வசந்த மண்டபமும் சீரழிக்கப்பட்டிருந்தன. உருக்குலைந்து சீரழிந்து எரிந்துகொண்டிருக்கும் அந்தத் தீவைப் பார்த்துக்கொண்டே கோவில் குறட்டில் நின்ற மகாமண்டலேசுவரர் கால் தளர்ந்து போனதன் காரணமாக மெதுவாக உட்கார்ந்தார். தாகம் நெஞ்சை வறளச் செய்தது, தொண்டைக் குழியை ஏதோ அடைந்தது, கண்கள் விழி தெரியும்படி சொருகின, வாய் கோணியது. மெல்லச் சாய்ந்து படுத்துக்கொண்டார். பின்பு எழுந்திருக்கவேயில்லை. மறுநாள் காலையில் தளபதி வல்லாளதேவனும் கழற்கால் மாறனாரும் தற்செயலாக அங்கே வந்து அவருடைய சடலத்தைக் கண்டனர்.

“மனிதர் நம்மை முந்திக்கொண்டுவிட்டார்!” என்று கூறிக் கொடுமையாகச் சிரித்தவாறே அந்த உடலைப் புரட்டித் தள்ளினான் தளபதி, பழிவாங்கி விட்ட பெருமிதம் அவனுக்கு! அருணோதயத்தின் அழகை அனுபவித்துக் கொண்டே முன்சிறை அறக்கோட்டத்தின் வாயிலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த கோதை யாரோ வருகிற காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தாள். - -

அவள் எதிரே நாராயணன் சேந்தனும், குழல்வாய் மொழியும் வந்து நின்றுகொண்டிருந்தனர். கோதைக்கு மைத்துனனைக் கண்ட மகிழ்ச்சி பிடிபடவில்லை. “வாருங்கள், மைத்துனரே! ஒய்வாக வந்திருக்கிறீர்களே.” என்று அவள் ஆர்வத்தோடு வரவேற்றாள்.

“ஓய்வுதான்! நிரந்தரமான ஒய்வு-நெடுங்காலத்துக்கு ஒய்வு” என்று சிரித்துக்கொண்டே கூறினான் சேந்தன். அதற்குள் அண்டராதித்தனும் அங்கு வந்துவிட்டான். சேந்தனும் குழல்வாய்மொழியும் அண்டராதித்தனையும் கோதையையும் வணங்கி ஆசி பெற்று உள்ளே சென்றார்கள்.