பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. கலகக் கனல் மூண்டது

போர்க்களத்தில் அந்த இரவில் மூண்ட கலவரங்களை அடக்கிவிட முயன்றனர் குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும். கலகம் அடங்கவில்லை. மேலும் மேலும் பெருகி வளர்ந்தது. கலகத்துக்குக் காரணமான செய்திகளைப் போர்க்களத்துப் பாறைகளில் பரப்புவதற்கு வந்த வெளியாட்கள் எல்லோரையும் இருளில் சரியாகப் பார்க்க முடியவில்லையாயினும் அதில் முக்கியமான ஒருவனைக் குமாரபாண்டியன் பார்த்துவிட்டான். அவ்வாறு பார்க்கப்பட்டவன் வேறு யாருமில்லை, ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன்தான்! ஆபத்துக் காலங்களில் நன்றியுணர்ச்சியோடு அரச குடும்பத்துக்கு உதவி புரிந்து பாதுகாக்க வேண்டிய அவன் இப்படிக் கலகக்காரனாக மாறியிருப்பதைக் கண்டு குமாரபாண்டியன் உள்ளம் கொதித்தான். கோட்டாற்றிலிருந்து வந்திருந்த தென்பாண்டிப் படைவீரர்களில் பெரும்பாலோர் பாசறைகளை விட்டு வெளியேறிக் கலகக்காரர்களோடு சேர்ந்து கொண்டு விட்டனர். குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்தத் துரோகம் நடந்தது. சாம, தான, பேத தண்ட முறைகளில் எதனாலும் அவர்களால் அதைத் தடுக்க இயலவில்லை.

“இளவரசே! காரியம் கைமீறிப் போய்விட்டது. பார்த்துக்கொண்டே சும்மாயிருப்பதில் பயனில்லை. உடனே தளபதியைப் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கச் சொல்லி ‘அரண்மனைக்கோ, மகாமண்டலேசுவரருக்கோதுாதனுப்புங்கள். தளபதி வந்துவிட்டால் இந்தக் கலகம் அடங்கிப் போகும்” என்றார் சக்கசேனாபதி.

“சக்கசேனாபதி ! தளபதியைப் போர்க்களத்துக்கு வரவழைத்துவிடுவது அவ்வளவு எளிய காரியமல்ல. அதில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல்களை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் நான் மாட்டிக்கொண்டிருக்கிறேன்."