பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

727


அந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்கு வந்த அரண்மனை மெய்காவற் படை ஒற்றனை மேலும் சில கேள்விகளைத் தூண்டிக் கேட்டார் பவழக்கனிவாயர்.

“நேற்று காலையில்தானே அந்தப் பெண் குழல்வாய் மொழி இங்கிருந்து புறப்பட்டு இடையாற்றுமங்கலத்துக்குப் போனாள்? அவள் போய்ச் சேர்ந்தாளோ, இடைவழியிலேயே கலகக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு விட்டாளோ? அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே?’ என்று பவழக்கனிவாயர் கேட்ட கேள்விக்கு ஒற்றன் கீழ்க்கண்டவாறு மறுமொழி கூறினான்.

“சுவாமி! மகாமண்டலேசுவரரின் புதல்வியும் அந்தரங்க ஒற்றன் நாராயணன் சேந்தனும் கலகக்காரர்கள் கையில் சிக்கவில்லையாம். அவர்களையும் எப்படியாவது பிடித்து விடுவதென்று கலகக்காரர்கள் வலை போட்டுத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்!” இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் மகாராணியின் மூர்ச்சை’ தெளிந்தது. எழுந்து உட்கார்ந்து மிரள மிரள விழித்தார் அவர். சுற்றிலும் நிற்பவர்களைப் பார்த்தார். தட்டுத் தடுமாறி எழுந்து நின்றார். தம்முடைய அந்தரங்க அறையை நோக்கிச் சென்றார். பின்பு நீண்ட நேரம் அவர் அந்த அறையிலிருந்து வெளியில் வரவே இல்லை. “மனம் நொந்திருப்பவர்களைத் தனியே விடக் கூடாது! நீங்களும் போய் உடன் இருங்கள்” என்று புவன மோகினியையும் விலாசினியையும் அனுப்பினார் அதங்கோட்டாசிரியர். அந்தப் பெண்கள் இருவரும் மகாராணி வானவன்மாதேவியாரின் அறைக்குள் தயங்கித் தயங்கிச் சென்றார்கள். .

அறை நடுவே உட்கார்ந்து பச்சைக் குழந்தைபோல விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார் மகாராணி. அவர் மடியில் ஒரு பழைய ஓலை கிடந்தது. விலாசினியையும் புவன மோகினியையும் நிமிர்ந்து பார்த்த மகாராணி கையாற் குறிப்புக் காட்டி அவர்களை உட்காரச் சொன்னார். கண்களைத் துடைத்துக்கொண்டு தன் மடியில் கிடந்த ஒலையை விலாசினியின் கையில் எடுத்துக் கொடுத்தார் மகாராணி,