பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

729


போர்க்களத்து நிலைமைகளைப் பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை. வடக்கே பகைவர்களோடு போர் செய்து கொண்டிருக்கிற சமயத்தில் நம்மோடு நாமே போரிட்டுக் கொள்ளும் இந்தக் கலகத்தைத் தளபதி ஏன் உண்டாக்கினானோ? தேசத் துரோகியாக மாறவேண்டுமென்று நன்றியை மறந்து துணிந்து விட்டானா வல்லாளதேவன்? இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா! கரிக்குப்பைக்கு நடுவில் வைரத்தைப் பார்ப்பதுபோல் இத்தனை துன்பத்துக்கும் நடுவில் இந்த ஒரு பாட்டை எடுத்துப் பார்த்தால் எனக்குச் சிறிது மெய்யுணர்வு உண்டாகிறது. கொஞ்சம் இதைப் படி, கேட்டு ஆறுதல் அடைகிறேன்” என்று சோகம் கனிந்த உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளால் வேண்டிக் கொண்டார் மகாராணி, விலாசினி படிக்கலானாள்:

“இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல வளமையும் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம் உளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும் விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொள்மின்!” பாட்டைக் கேட்டுவிட்டு மகாராணி கூறலானார்:

“நிலையாத பொருள்களை நிலைப்பனவாக எண்ணி மயங்கியிருந்தால் இப்படித்தானே அந்தப் பொருள்கள் அழியும் போதுதுக்கப்படவேண்டியிருக்கிறது? நிலையாததையெல்லாம் படைத்துவிட்டு நிலைத்திருப்பது எதுவோ அதை நினைக்கப் பழகிக்கொண்டிருந்தால் இப்போது என் மனம் இப்படிக் குமுறுமா ? உணர்ச்சி நைப்பாசைகளையும், எண்ண அழுக்குகளையும் வைத்துக்கொண்டே மெய்யுணர்வை இழந்து விட்டேனே ? விலாசினி! துக்கத்தையும், ஏமாற்றங்களையும் அனுபவிக்க இந்தப் பாட்டின் அர்த்தம் கடல் போல் விரிவடைந்து கொண்டே போவதுபோல் ஒரு பிரமை உண்டாகிறது, பார்த்தாயா? அந்தப் பாட்டைக் கேட்டு மகாராணி பேசிய வார்த்தைகளால் அவருடைய மனம் எந்த அளவுக்கு வேதனையும், விரக்தியும் அடைந்து போயிருக்கிற தென்பதை விலாசினி உணர்ந்தாள். -