பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் நீங்கள் இவ்வளவு பெரிய பேரிடியை என் காதில் போடுகிறீர்கள். நான் என்னதான் செய்யப் போகிறேனோ? இப்போதுள்ள படைகளை வைத்துக்கொண்டு இரண்டு நாள் போரைக்கூடச் சமாளிக்க முடியாதென்று சக்கசேனாபதி கையை விரித்துவிட்டார்.”

“போரைச் சமாளித்து வெற்றி பெற்றாலும் இனி என்ன பயன் மகனே? கடமையையும், நன்றியையும் போற்றிவந்த தூய வீரனாக இருந்த தளபதி கண்மூடித்தனமான வெறிச் செயலில் இறங்கிவிட்டான். கூற்றத் தலைவர்களும் அவனோடு சேர்ந்துகொண்டு விட்டார்கள். எவ்வளவோ சாமர்த்தியமாக இருந்த மகாமண்டலேசுவரரும் கெடுமதி நெருங்கியதாலோ என்னவோ, இப்படியெல்லாம் செய்து தம்மை அழித்துக் கொண்டுவிட்டார். தளபதியைச் சிறைப்படுத்தியும், பகவதியின் மரணத்தை மறைத்தும் அவர் சூழ்ச்சிகள் செய்திராவிடில் இந்தக் கலகமே ஏற்பட்டிராது. அழியப் போகிற தீவினை விளைவு நெருங்கிவிட்டால் எவ்வளவு பெரிய அறிவாளிக்கும் நாணயம் தவறிவிடும் போலிருக்கிறதே!” என்று மகாராணி விரக்தியோடு மறுமொழி கூறினார்.

“அம்மா நீங்களும் இப்படி மனம் வெறுத்துப் பேசினால் நான் என்ன செய்வது? சேர நாட்டுப் படைத் தலைவனும், பெரும்பெயர்ச்சாத்தனும் இந்தப் போரில் வீர மரணம் அடைந்தார்கள். கடல் கடந்து வந்தவன் சக்கசேனாபதி இரவும் பகலும் நம் வெற்றிக்காக முயல்கிறார். இந்தச் சமயத்திலா தளர்வது? வாருங்கள்! நானும் நீங்களுமாகப் போயாவது தளபதியைக் கெஞ்சிப் பார்க்கலாம். அவன் மனம் இரங்காமலா போய்விடுவான்? அம்மா! எல்லாத் துன்பங்களையும் மறந்து புறப்படுங்களம்மா, கடைசியாக முயல்வோம்” என்று தாயின் பாதங்களைப் பற்றிக்கொண்டு க்ெஞ்சினான் இராசசிம்மன். மூன்றாம் நாள் காலை பதினொரு நாழிகைக்குள் தளபதியோடு போர்க்களத்துக்கு வரவில்லையானால் வெற்றியைப்பற்றி நினைப்பதற்கில்லை யென்று சக்கசேனாபதி கூறியனுப்பியிருந்த நிபந்தனையையும் தாயிடம் கூறி முறையிட்டான் அவன்.