பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

741

தீபத்தை எடுத்துக்கொள். சுரங்கப் பாதைக்குள் இருட்டு அதிகமாக இருக்கும்” என்று கூறிக்கொண்டே முன்னால் நடந்தார் மகாராணி. குமாரபாண்டியன் அந்தப்புரத்துக் கதவை அடைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவர்களோடு வந்து சேர்ந்து கொண்டான். அந்தச் சமயத்தில் அவனுடைய முகத்தைக் காண்பவர்களுக்கு உலகத்திலுள்ள நிராசையெல்லாம் அங்கே வந்து குடி கொண்டுவிட்டது போல் தோன்றியது. போர்க்களத்தில் சக்கசேனாபதியிடம் வாக்களித்துவிட்டு இரவோடு இரவாகக் கிளம்பியபோது அவன் மனத்தில் உருவாகி எழுந்து ஓங்கி நின்ற நம்பிக்கை மாளிகை இப்போது தரைமட்டமாகிவிட்டதைப் போல் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. மகாமண்டேலசுவரரின் மரணம், குழல்வாய்மொழியின் வினோதமான திருமணம், கலகக் கூட்டத்தின் பழிவாங்கும் வெறி, மகாராணியின் அவநம்பிக்கை, எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நினைக்கும்போது தன்னுடைய இனிய கனவுகளில் பெரும் பகுதி அழிக்கப்பட்டு விட்டதுபோல் உணர்ந்தான் அவன். அன்றொருநாள் மழையும், புயலும் வீசிய இரவில் ஈழநாட்டுக் காட்டில் பாழ்மண்டபத்து இருளில் உட்கார்ந்து வாழ்க்கையின் முழுமையைப்பற்றிச் சிந்தித்ததை மறுபடியும் நினைத்துப் பெருமூச்சு விட்டான் அவன்.

அவர்கள் எல்லோரும் நந்தவனத்துக்குப் போய்ச் சுரங்கப்பாதை ஆரம்பிக்கிற இடத்தை அடைந்தனர். விதியைப் பின் தொடரும் பேதை மனிதனைப் போல் குமாரபாண்டியனும் அவர்களைப் பின்பற்றி அங்கே சென்றான். அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே துக்கம் வடியும் குரலில் “செல்வா! உன் முன்னோர் மன்னாதிமன்னராக வாழ்ந்து சிறந்த இந்த அரண்மனையை இறுதியாக ஒருமுறை பார்த்துக்கொள். இனி இந்த மாபெரும் அரண்மனை இருப்பதும், இல்லாததும் உனக்குக் கிடைப்பதும், கிடைக்காததும் விதியின் ஆணையைப் பொறுத்தது” என்றார் மகாராணி, இராசசிம்மன் நிமிர்ந்து பார்த்தான். கதவுகள் உடையும், சுவர்கள் இடிபடும் ஒலியுமாக அந்த அரச மாளிகை முடிவின் எல்லையில் இருந்தது. எல்லாரும் சுரங்க வழிக்குள் இறங்கிவிட்டனர். புவனமோகினி தீபத்தோடு முன்னால் சென்றாள். கடைசியாகக்